இந்தியா-இந்தோனேஷியா வேளாண் துறை உடன்பாடு

திங்கள், 1 டிசம்பர் 2008 (17:35 IST)
ஜகார்த்தா: இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவிற்கும் இடையே விவசாயம், விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துறைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது.

இந்திய குடியரசு தலைவர் பிரதீபா பாடீல், இந்தோனேஷியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், குடியரசு தலைவர் பிரதிபா பாடீல், இந்தோனேஷியா குடியரசு தலைவர் சுசிலோ பாம்பாங் யூதோயோனா ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தானது.

1992 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே விவசாயம், அதன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பிற்கான உடன்பாடு உள்ளது. தற்போது இதை மேலும் செழுமைபடுத்தி புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இதன் படி விவசாய ஆராய்ச்சி, தோட்டகலை பயிர்கள், விவசாய இயந்திரங்கள், உணவு பதப்படுத்துதல், நீர் மேலாண்மை, உயிரி தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்.

இரு நாடுகளிடையே விளையாட்டை ஊக்குவிப்பது, இளைஞர்கள், விளையாட்டு, இதன் தொடர்புடைய துறைகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கப்படும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சியின் போது, இந்தோனேஷியாவின் விவசாய அமைச்சர் அன்டோன் அப்ரியான்டோனோ, இந்தியாவின் தொழில் கொள்கை & மேம்பாட்டு துறை இணை அமைச்சர் அஸ்வின் குமார், இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை இணை அமைச்சர் அதியஸ்கா டவுல்ட் ஆகியோரும் பங்கேற்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்