ஐ.சி.ஐ.சி.ஐ பங்கு விற்பனையில் முறைகேடு இல்லை-செபி!
வெள்ளி, 21 நவம்பர் 2008 (11:33 IST)
மும்பை:ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்குகள் செப்டம்பர் மாதத்தில் விலை குறைந்ததற்கு, முறைகேடான வர்த்தகம் காரணம் அல்ல என்று செபி அறிவித்துள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்குளின் விலை செப்டம்பர் மாதத்தில் தொடர்ந்து குறைந்தது. இந்த வங்கி அந்நிய நாட்டு வங்கிளில் முதலீடு செய்துள்ளது. இந்த வங்கிகள் நஷ்டம் அடைந்துள்ளதால், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் நஷ்டம் அடையும் என்ற தகவல் பரவியுது. பலர் வங்கியில் வைத்திருந்த வைப்புத் தொகையை திரும்ப பெறுவதாகவும் செய்திகள் வந்தன.
இதையடுத்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சேர்மன் கே.வி காமத், வங்கி பாதுகாப்பாக உள்ளதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவித்தார்.
அத்துடன் வங்கி பங்குளின் விலை குறைவதற்கு சிலர் திட்டமிட்டு வதந்திகளை பரப்பி, முறைகேடான வழியில் ஈடுபடுவதே என்று குற்றம் சாட்டினார்.
இதை பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் அமைப்பான செபி விசாரிக்க வேண்டும் என்று வங்கி கேட்டுக் கொண்டது.
இதை தொடர்ந்து செபி, செப்டம்பர் 8 ஆம் தேதி முதல் அக்டோபர் 10 ஆம் தேதி வரையில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் பங்கு வர்த்தகத்தை பற்றி விசாரணை நடத்தியது.
இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் பங்குச் சந்தைகளில் பல நிறுவன பங்குளின் வர்த்தகம் பற்றிய விபரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப் படுகின்றன. இதில் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்குகளின் வர்த்தகத்தில் முறைகேடு உள்ளது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை.
இந்த வங்கியின் பெரும்பான்மையான பங்குகளை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வசம் உள்ளன. இவை பொதுவாக பங்குளை வாங்குவது, பிறகு விற்பனை செய்வதில் ஈடுபடும். இந்த நேரத்தில் அதிக அளவு வாங்கி, விற்பனை செய்துள்ளன.
இதன் விலை குறைக்க வேண்டும் என்பதற்காக, யாரும் குறைந்த விலையில் பங்குகளை விற்பனை செய்யவில்லை. பங்குகளை வாங்குபவர்கள் அல்லது புரோக்கர்கள் ஒரே நாளில் குறைந்த விலைக்கு வாங்கி, அதிக விலைக்கு பங்குகளை வாங்கியதற்கான ஆதாரம் இல்லை என்று செபி கூறியுள்ளது.
இந்த பங்குகளின் விலை செப்டம்பர் 8 ஆம் தேதி ரூ.720.45 ஆக இருந்தது. அக்டோபர் 10 ஆம் தேதி 363.65 ஆக சரிந்தது. இதன் விலை 49.52 விழுக்காடு குறைந்தது.