தங்கம் ஆன்லைன் வர்த்தக தடை- கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் வலியுறுத்தல்!
திங்கள், 10 நவம்பர் 2008 (11:54 IST)
திருச்சி: தங்கம் ஆன்லைன் வர்த்தகத்தால் (முன்பேர சந்தை) பாதிக்கப்பட்டுள்ள 15 லட்சம் பொற்கொல்லர்களின் நலன்கருதி, உடனடியான ஆன்லைன் வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகம் மத்திய அரசு மற்றும் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.
இதன் மண்டல மாநாடு திருச்சியில் நேற்று நடைபெற்றது.
இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பற்றி, மாநாடு வரவேற்பு குழு தலைவர் இ.கிருஷ்ணன், கைவினைஞர்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வி.சிவகுமார் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது.
விஸ்வகர்ம சமுதாயத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். வேளாண் தொழிலுக்குத் தேவையான உரம், பூச்சிமருந்து, விவசாயக் கருவிகள் அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும்.
தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் விதை, உரம், பூச்சி மருந்து போன்றவற்றை இலவசமாகக் வழங்க வேண்டும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலும், மாநிலக் கூட்டுறவு வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளர்களுக்கு வழங்கும் கமிஷன் அடிப்படையை ரத்து செய்து, இவர்களை நிரந்தரப் பணியாளர்களாக ஆக்க வேண்டும். அத்துடன் நகை தொழிலில் சம்பந்தப்பட்டவர்களையே நகை மதிப்பீட்டாளர்களாக நியமிக்க வேண்டும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்ய உழவர் சந்தைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதே மாதிரி கைவினை பொருட்களை விற்பனை செய்யவும் தனியாக சந்தை அமைக்க வேண்டும்.
பொற்கொல்லர் நல வாரியத்துக்கு பொற்கொல்லரே தலைவராகவும், துணைத் தலைவராகவும், கைவினைஞர் நல வாரியத்துக்குத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் கைவினைஞர்களையே நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.