எரிபொருள் கட்டணம்: பிரபுல் படேலைச் சந்திக்கிறார் தியோரா!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (18:08 IST)
மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவங்களின் உயர் அதிகாரிகளை பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா புதன்கிழமையன்று புதுடெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தக் கூட்டத்தில், பொதுத்துறை விமான நிறுவனங்கள் வாங்கும் எரிபொருளுக்கான கட்டணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாமதமாக வழங்கி வருவது குறித்த பிரச்சினை எடுத்துரைக்கப்படும் என்று தெரிகிறது.
விமான எரிபொருளுக்கான கட்டணத் தொகையை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்க ஏதுவாக இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், விமான நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளிடம் பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா, எரிபொருள் கட்டணத்தை அவ்வப்போது வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வார் என்று தெரிகிறது.
விமான நிறுவனங்களுக்கு உதவி செய்யவே தாம் விரும்புவதாகவும், விமான நிறுவனங்கள் தங்களது செயல்பாடுகளை மூட வேண்டும் என்பது தங்கள் விருப்பம் அல்ல என்று முரளி தியோரா செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்துள்ளார்.
எண்ணெய் நிறுவனங்கள் நிதிப் பிரச்சினையில் சிக்கித் தவிப்பதாகவும், அவற்றைத் தவிர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சில நேரங்களில் எரிபொருள் கட்டணத்தை செலுத்துவதற்கு வழங்கப்படும் 60 நாட்களையும் கடந்து எண்ணெய் நிறுவனங்களுக்கு தொகை செலுத்தப்படுவதில்லை என்றும் தியோரா குறிப்பிட்டார்.