விளையாட்டுப் பொருட்கள் விற்பனை மந்தம்!

வியாழன், 14 ஆகஸ்ட் 2008 (17:38 IST)
ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றும் விளையாட்டு பொருட்கள் விற்பனை மந்தமாகவுள்ளதால் அதன் தயாரிப்பாளர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜலந்தர் “விளையாட்டு நகர” என்று அழைக்கப்படுகிறது. இங்கு திரும்பிய பக்கமெல்லாம் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கபடுகின்றன. உள்நாட்டில் விற்பனை செய்வதுடன் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.

இந்தியாவிற்கு பக்கத்து நாடான சீனாவில் ஒலிம்பிக் பந்தயம் நடக்கிறது. அடுத்த இரண்டு வருடங்களில் இந்தியாவில் காமன்வெல்த் நாடுகளின் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.

சீன ஒலிம்பிக் போட்டிக்கும், நடக்க போகும் காமன்வெல்த் போட்டிக்கும் இதுவரை விளையாட்டு பொருட்களை யாருமே வாங்கவில்லை. இதற்கான ஆர்டர்களும் வரவில்லை என்று ஜலந்தர் விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள் வருத்தம் தோய்ந்த குரலில் கூறுகின்றனர்.

ஷாருக்கான் நடித்த சக் டி இந்தியா” திரைப்படம் திரையிட்பபட்ட போது, ஹாக்கி மட்டை, பந்து போன்றவைகளின் விற்பனை அதிகரித்தது. இந்த மகிழ்ச்சி நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஒலிம்பிக் தகுதி போட்டியில் இந்திய ஹாக்கி அணி தோல்வியை தழுவிய உடன், ஹாக்கி மட்டைகளின் விற்பனையும் படுத்துவிட்டது என்று முன்னணி விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர் ரானா ரகுநாத் சிங் தெரிவித்தார்.

ஜலந்தரில் இருந்து வருடத்திற்கு ரூ.500 கோடி மதிப்புள்ள விளையாட்டு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஆனால் இன்று வரை ஒலிம்பிக் விளையாட்டுக்காக ஒரு பந்துக்குக் கூட ஆர்டர் கிடைக்கவில்லை என்று விளையாட்டு பொருள் தயாரிப்பாளர்கள் கவலையுடன் கூறுகின்றனர்.

இவர்களின் அவல நிலையை பற்றி மற்றொரு விற்பனையாளர் ராஜ் சிங் கூறும் போது, ஒலிம்பிக்தான் எங்களை பந்தாடி விட்டது என்றால், இந்தியாவில் நடக்க உள்ள காமன்வெல்த் நாடுகளின் போட்டிக்கு, இது வரை ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை.

உலக கால்பந்து போட்டியின் போது அதிக அளவு ஆர்டர்கள் கிடைத்தன. பல அந்நிய நாடுகளில் இருந்து கால்பந்து போன்றவை தயாரித்து அனுப்பும் படி ஆர்டர் வந்தது. இந்த நகரில் உள்ள ஒவ்வொரு தொழிற்சாலைகளும் இரவு, பகலாக இயங்கின.

இப்போது எங்களுக்கு கிரிக்கெட் மட்டை, இதற்கு தொடர்பான பொருட்களை தயாரிப்பதால் தான் வருவாயே கிடைக்கிறது. கிரிக்கெட்டின் புகழ் மங்கிவிட கூடாது என்று தினமும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறோம் என்று ராஜ் சிங் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்