மக்காச் சோளம் ஏற்றுமதி தடை விவசாயிகளுக்கு எதிரானது– நிதிஷ் குமார்!

புதன், 30 ஜூலை 2008 (18:47 IST)
மக்காச் சோளம் ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு விதித்துள்ள தடையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா‌ல், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு இந்த தடையை நீக்க வேண்டும் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

மக்காச் சோளத்தை பயன்படுத்தி கோழி தீவனம் உட்பட கால்நடை தீவனங்கள் தயாரிக்கப்படுகின்றன. மக்காச் சோளம் ஏற்றுமதி செய்யப்படுவதால், இதன் விலை உயர்வதுடன் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே மக்காச் சோளத்தை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோழி பண்ணை உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர். இதனால் மத்திய அரசு இந்த மாத தொடக்கத்தில் மக்காச் சோள ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

இந்த தடையால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தடையை மன்மோகன் சிங் தலையிட்டு நீக்க வேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, நிதிஷ் குமார் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் மக்காச் சோளத்தின் விலை கடுமையாக குறைந்துள்ளது. அத்துடன் விற்பனையும் மந்தமாக உள்ளது. இதனால் ஏற்கனவே சிரமத்தில் உள்ள விவசாயிகள் ஏற்றுமதி தடையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மக்காச் சோள ஏற்றுமதி தடையால் பீகார் மாநிலம் உட்பட நாட்டின் இதர பகுதிகளிலும் உள்ள ஆயிரக்கணக்கான சிறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் விவசாய உற்பத்தியை அதிகரிக்க எடுக்கப்படும் நடவடிக்கையும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இது நாட்டின் உணவு பாதுகாப்பையும் பாதித்துள்ளது.

இந்தியாவின் மொத்த மக்காச் சோள உற்பத்தியில் பீகாரின் பங்கு 10 விழுக்காடாக உள்ளது. பீகாரில் 17 இலட்சம் டன் மக்காச் சோளம் உற்பத்தி செய்யப்படுகிறது. பயிர் விளைச்சலுக்கு தேவையான இடு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஏற்றுமதி தடை விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளது என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்