வருமான வரி தாக்கல் - அரசு விளக்கம்!

சனி, 19 ஜூலை 2008 (18:14 IST)
வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது, வரிமான வரி பிடித்தம் செய்த சான்றிதழ் இணைக்க‌த் தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தற்போது மாத ஊதியம் பெறுபவர்களுக்கு சம்பளம் வழங்கும் போதே வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. இதை அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களே பிடித்துக் கொள்ளும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணத்தை வருமான வரி துறையில் செலுத்திவிடும்.

நிதி ஆண்டு முடிந்தபிறகு, ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மாதவாரியாக வருமான வரிக்காக ஊழியர்களிடம் இருந்து பிடித்தம் செய்து வருமான வரி துறையிடம் பணம் கட்டியதற்கான சான்றிதழ்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் வழங்கும். நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் இந்த படிவம் 16 எண் படிவம் என்று அழைக்கப்படுகிறது.

இதே போல் ஒப்பந்த கால அடிப்படையில் வேலை செய்பவர்களின் மாத ஊதியத்தில் இருந்து வருமான வரி பிடித்தம் செய்து கட்டிய விபரங்கள் அடிங்கிய படிவம் 16ஏ படிவம் (Form 16A) என்று அழைக்கப்படுகிறது.

மாத ஊதியம் பெறுபவர்கள் ஒவ்வொரு வருடமும் ஜூலை 31 ஆம் தேதிக்குள், முந்தைய நிதி ஆண்டிற்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யும் போது, அதனுடன் படிவம் 16 அல்லது படிவம் 16 ஏ உட்பட மற்ற ஆவணங்களையும் இணைத்து தர வேண்டுமா, இவை இணைக்காமல் தாக்கல் செய்யலாமா என்ற குழப்பம் நிலவியது.

இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நேற்று மத்திய நேரடி வரி வாரியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இதில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் போது வரி பிடித்தம் செய்ததற்கான 16, 16ஏ படிவமும், மற்ற வரி விலக்கு உரிய ஆவண சான்றிதழ்களும் இணைத்து வழங்க தேவையில்லை. அவ்வாறு இணைக்கப்பட்டு இருந்தால் வருமான வரி படிவத்தை பெற்றுக் கொள்ளும் அதிகாரி, இதை தாக்கல் செய்பவரிடமே திருப்பி கொடுத்து விடுவார்.

வருமான வரி அலுவத்திற்கு நேரடியாக செல்லாமல், இணையத்தின் மூலம் வரிமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏற்ற வகையில் படிவம் இணைக்க தேலை இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் படிவம் 16 உட்பட மற்ற ஆவணங்களை வருமான வரி செலுத்துபவர் தன் பொறுப்பில் பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை வருமான வரி அதிகாரி சரிபார்ப்புக்காக கேட்கும் போது தாக்கல் செய்ய வேண்டும்.

வருமான வரி அதிகாரி, வரி செலுத்துபவர் சட்டப்படியான வருமான வரி விலக்கு கேட்கும் போது, படிவம் 16 இணைக்கவில்லை என்ற காரணத்தை மட்டும் கூறி, சட்டப்படியான கழிவு கொடுக்க முடியாது என மறுக்க கூடாது.

இதே விதி முறைகள் முன் செலுத்தும் வரி (Advance Tax), தானாக கணக்கிட்ட வரி (Self Assessment Tax) ஆகியவைகளுக்கும் பொருந்தும்.

வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்பவர்கள், அந்த அறிக்கையில் உள்ள விபரங்களின் படி வேலை செய்யும் நிறுவனங்கள் வழங்கும் வரி பிடித்தம் சான்றிதழ் (படிவம் 16, 16 ஏ) கணக்கு தணிக்கையாளர் சான்றிதழ், மற்ற ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும் படி நேரடி வரி வாரியம் அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்