அத்தியாவசிய பொருட்களின் விலை உயரவில்லை!

வெள்ளி, 11 ஜூலை 2008 (18:52 IST)
பணவீக்கம் கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிக்காமல், நிலையாக உள்ளது என்று மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ புள்ளி விபரப்படி ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 11.89 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உணவு தானியங்கள், பருப்பு வகைகள், சமையல் எண்ணெய், காய்கறி, பால் பொருட்கள், மண் எண்னெய், சோப்பு, தீப்பெட்டி, ஆகியவற்றின் விலை அதிக அளவு உயரவில்லை என்று தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சகம் 30 வகை பொருட்களின் விலைகளை பற்றி ஆய்வு செய்து, இதன் குறியீட்டு எண் ஜூன் 28 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 5.98% ஆக இருப்பதாக கூறியுள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் 5.89% ஆக இருந்தது.

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் உள்ள 98 பொருட்களில் கோதுமை, அரிசி, மக்காச் சோளம், பூண்டு, முட்டை கோஸ், சீரகம், மிளகு, இஞ்சி உட்ப 12 பொருட்களின் விலை குறைந்துள்ளது. மற்ற 55 வகை பொருட்களின் விலை உயரவில்லை.

உற்பத்தி பிரிவில் உள்ள 320 வகை பொருட்களில் 278 வகை பொருட்களின் விலை, இதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிக்கவில்லை.

துத்தநாகம், பென்சிலின், இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய், தேனிரும்பு, உருக்கு பொருட்கள், பருத்தி விதை எண்ணெய், புண்ணாக்கு போன்ற 16 வகை பொருட்களின் விலை குறைந்துள்ளது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவைகளின் விலை உயர்வால் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் இருக்கின்றது என்று நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்