வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது ஸ்டெட் வங்கி!
வெள்ளி, 27 ஜூன் 2008 (21:02 IST)
நமது நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் வங்கியான ஸ்டேட் வங்கி, வைப்பு நிதிக்கான வட்டி விகிதங்களை 75 அடிப்படைப் புள்ளிகள் உயர்த்தியுள்ளது.
கடன் மீதான வட்டி விகிதங்களை உயர்த்திய ஒரு நாளுக்குப் பிறகு அறிவிக்கப்பட்டுள்ள, இந்த வைப்பு நிதி வட்டி உயர்வு இம்மாதம் 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
181 நாட்கள் முதல் ஓராண்டிற்குக் குறைவான வைப்பு நிதி வட்டி விகிதம் 7.5 விழுக்காட்டில் இருந்து 8 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஓராண்டு முதல் இரண்டு ஆண்டிற்கும் குறைவான காலத்திற்கான வைப்பு நிதி மற்றும் இரண்டு ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திற்கான வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி விகிதம் 8.75 விழுக்காட்டில் இருந்து 9.5 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
மூன்று ஆண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான காலத்திற்கான வைப்பு நிதி வட்டி விகிதம் 8.85 விழுக்காட்டில் இருந்து 9 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
இருந்தாலும், 180 நாட்களுக்குக் குறைவான காலத்திற்கான வைப்பு நிதி வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை.
மேலும், மூத்த குடிமக்களின் வைப்பு நிதி வட்டி விகிதங்களும் உயர்த்தப்பட்டுள்ளன.
அவர்களின், ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கு குறைவான வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 9.25 விழுக்காட்டில் இருந்து 10 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ளது.
முன்னதாக நேற்று, ஸ்டேட் வங்கி தனது கடன் வட்டி விகிதங்களை 50 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 12.75 விழுக்காடாக உயர்த்தியது.