முன்பேர வர்த்தகத்தால் விலை ஏற்றம்?

திங்கள், 31 மார்ச் 2008 (15:42 IST)
உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் முன்பேர வர்த்தகம் தான் என்ற குற்றச்சாட்டு சரியா என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் இருந்து முன்பேர வர்த்தகத்தில் உள்ள பொருட்களின் விலை உயர்வை விட, இதில் இல்லாத பொருட்களின் விலை அதிகரித்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் இரண்டு பண்டக சந்தைகள் உள்ளன. நேஷனல் கமோடிட்டி எக்சேஞ்ச், நேஷனல் கமோடிட்டி அண்ட் டிரைட்டிவ்ஸ் எக்சேஞ்ச் என்று இரண்டு பண்டக சந்தைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தங்கம் முதல் உணவுப் பொருட்கள் வரை முன்பேர வர்த்தகம் நடக்கிறது.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் முதல் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் வரை விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டு உள்ளது. இதற்கு காரணம் முன்பேர வர்த்தகத்தில் ஈடுபடுவதே என்று அரசியல் கட்சிகள், வியாபாரிகள் முதல் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இதை பற்றி நேஷனல் கமோடிட்டி அண்ட் டிரைட்டிவ்ஸ் எக்சேஞ்ச் என்ற பண்டக சந்தையில் நடக்கும் வர்த்தகத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் வர்த்தகம் நடக்கும் 15 பொருட்களின் விலை கடந்த ஒரு வருடத்தில் 5.84 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அதே நேரத்தில் முன்பேர சந்தையில் வர்த்தகம் தடை செய்யப்பட்டுள்ள அல்லது வர்த்தகம் நடக்காத 30 பொருட்களின் விலைகள் 9.04 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மத்திய அரசு பணவீக்கம் பற்றி மதிப்பீடு செய்யும் மொத்த விலை அட்டவணையில், முன்பேர வர்த்தகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு 7.78 மதிப்பீடு கொடுக்கப்படுகிறது.

அதே நேரத்தில் வர்த்தகத்திற்கு அனுமதிக்காத பொருட்களுக்கு 17.6 விழுக்காடு மதிப்பீடு கொடுக்கப்படுகிறது.

முன்பேர வர்த்தகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள கடலை பருப்பு, வெல்லம், கடலை பயறு, சோயா எண்ணெய் ஆகியவைகளின் விலை சி‌றிது அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் சோயா எண்ணெய் வித்து, கடுகு எண்ணெய் வித்து, கடுகு எண்ணெய் விலை அதிக அளவு உயர்ந்துள்ளது.

முன்பேர வர்த்தகம் நடக்காத முட்டை, இறைச்சி, மீன் வனஸ்பதி, பால் ஆகியவற்றின் விலை சிறிதளவு அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் சமையல் எண்ணெய், துவரம் பருப்பு, சோளம், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவைகளின் விலை அதிகளவு உயர்ந்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் பற்றி, நேஷனல் கமோடிட்டி அண்ட் டிரைட்டிவ்ஸ் எக்சேஞ்ச் தலைமை செயல் அதிகாரி பி.ஹெச்.ரவிகுமார் கூறுகையில், இந்த ஆய்வு முடிவுகளில் இருந்து, முன்பேர சந்தையில் வர்த்தகம் நடப்பது தான் உணவு பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்பது தவறானது என தெரிய வருகிறது.

உலக அளவில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை, உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் உள்நாட்டிலும் விலை உயருகின்றன. அத்துடன் உள்நாட்டு தேவை அதிகரிக்கும் அளவிற்கு, பொருட்கள் கிடைக்காததும் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்