இந்தியாவின் முன்னணி கார் நிறுவனமான மாருதி சுஜூகி சுவிஃப்ட் டிஜியர் என்ற புதிய காரை டில்லியில் அறிமுகப்படுத்தியது.
இந்த புதிய காரின் விலை (டெல்லியில்) ரூ.4 லட்சதது 49 ஆயிரம் முதல் ரூ.6 லட்சத்து 70 ஆயிரம் வரை. பெட்ரோல், டீசலில் ஓடக்கூடிய இரண்டு வகை கார்களையும் சுவிஃப்ட் டிஜியர் ரகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
பெட்ரோலில் ஓடக்கூடிய காரின் விலை ரூ.4.49 லட்சம் முதல் ரூ.5.9 லட்சம் வரை என உள் வேலைப்பாடு, கூடுதல் பாகங்களை பொருத்து இருக்கும்.
இதே போல் டீசலில் ஓடும் காரின் விலை அதன் ரகத்தை பொறுத்து ரூ.5.39 லட்சம் முதல் ரூ.6.7 லட்சம் வரை என அறிவித்துள்ளது.
டெல்லியில் மிக சிறப்பாக நடந்த அறிமுக விழாவில் மாருதி சூஜூகி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். நகானிஷி பேசும் போது, “எங்களது நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியா முக்கியமான நாடாகும். இது கடந்த மூன்று வருடங்களில் நாங்கள் அறிமுகப்படுத்தும் 7வது புதிய ரக கார். இந்தியர்களின வருவாய் அதிகரித்து வருகிறது. அவர்களின் வாழ்க்கை நிலையும் மேம்பட்டு வருகிறது. இதனால் பலர் சொகுசான கார்களை சொந்தமாக வைத்திருக்க விரும்புகின்றனர். ஆனால் புதிதாக கார் வாங்குபவர்களுக்கு சிறப்பாக இயங்க கூடிய, சொகுசான, நவீன வசதிகள் உடைய கார்களை தேர்ந்தெடுப்பது கடினமாக உள்ளது. இவை எல்லாம், நாங்கள் அறிமுகப்படுத்தி உள்ள சுவிஃப்ட் டிஜியர் ரக காரில் அடங்கியுள்ளன. அத்துடன் விலையும் நியாயமானது என்று கூறினார்.
சுவிஃப்ட் டிஜியர் ரக காரில் ஸ்டிரியோ, ஏ.சி வசதி, ஜன்னல் கண்ணாடிகளை மின்சாரத்தில் ஏற்றி இறக்கும் வசதி, விபத்தில் இருந்து காக்கும் இரண்டு அடுக்கு காற்று பை போன்ற வசதிகள் உள்ளன.
இந்த புதிய கார் ஆர்டிக் வெண்மை, சில்வர், கிளியர் ஃபிஜ்ஜி, மிட் நைட் பிளாக், பிரைட் ரெட், அஜூரி கிரே, சவரியன் புழு ஆகிய ஏழு நிறங்களில் கிடைக்கிறது.
இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் பிப்ரவரி மாதம் வரை ஏ3 ரக கார்கள் எனப்படும், இந்த ரக கார்களை மாருதி சுஜுகி நிறுவனம் பலத்த போட்டிகளிடையே 41 ஆயிரம் கார்கள் வரை விற்பனை செய்துள்ளது.