பங்குச்சந்தைகளுக்கு 2 நாள் அரசு விடுமுறை: 24-ம் தேதியே வர்த்தகம்!
வியாழன், 20 மார்ச் 2008 (12:40 IST)
தொடர் பண்டிகைகள் காரணமாக மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை ஆகியவற்றிற்கு இரண்டு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 24-ம் தேதியே பங்குச்சந்தை வர்த்தகம் துவங்குகிறது.
இன்று இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான 'மிலாது-உன்-நபி'யும், நாளை கிறிஸ்தவர்களின் 'புனித வெள்ளி' மற்றும் 'ஹோலி' பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த இரண்டு நாட்களும் அரசு விடுமுறை என்பதால் மும்பை பங்குச்சந்தை, தேசிய பங்குச்சந்தை ஆகியவற்றிற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போல் சனி, ஞாயிறு கிழமைகளிலும் பங்குச்சந்தை செயல்படாததையடுத்து, நான்கு நாட்களுக்கு பிறகு திங்கள்கிழமை காலையே பங்குச்சந்தைகளில் வர்த்தகம் துவங்க உள்ளது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 14,994.83 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 4,533.00 புள்ளிகளிலும் நேற்றைய இறுதி வர்த்தகம் முடிவடைந்துள்ளது.