ரியல் எஸ்டேட் ஒழுங்குபடுத்த சட்டம்!

வெள்ளி, 14 மார்ச் 2008 (13:54 IST)
டில்லியில் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்த சட்டம் கொண்டுவர மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் வீட்டு மனை, குடியிருப்புகளை வாங்குபவர்கள் ஏமாற்றப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு உள்ளது.

அரசு அங்கீகாரம் பெறாத வீட்டு மனை, காலி மனைகளை விற்பனை செய்வது, அரசிடம் அனுமதி பெற்றதற்கு மேல் பல மாடிகளை கட்டுவது போன்ற, விதிமுறைகளின் படி காலி இடம் விடாமல் இருப்பது போன்ற குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

அத்துடன் பல ஊர்களில் ஒரே காலி மனையை பலருக்கு விற்பனை செய்வது, மனை அல்லதவீட்டின் சொந்தக்காரருக்கே தெரியாமல் அடுத்தவர்களுக்கு விற்பனை செய்வது, போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்வது, பவர் ஆப் அட்டர்னி எனப்படும் அதிகார பத்திரத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்வது போன்ற முறைகேடுகள் ரியல் எஸ்டேட் தொழிலில் நடந்து வருகின்றன.

இதனால் பல அப்பாவி மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். இந்த வகையான மோசடி பற்றி காவல் துறையில் புகார்களும், நீதி மன்றங்களில் வழக்குகளும் தினந்தோறும் குவிகின்றன.

இத்துடன், குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்யும் கட்டுமான நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளை பெருநகர வளர்ச்சி ஆணையம், நகராட்சிகள் போன்ற சம்பந்தப்பட்ட அரசு துறைகளிடமிருந்து உரிய அனுமதி பெறாமல் கட்டி விற்பனை செய்கின்றனர். இதனால் வீட்டை வாங்கியவர்கள் பல்வேறு விதங்களில் பாதிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

இவற்றை முறைப்படுத்தி, பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகாமல் பாதுகாக்கும் வகையில் ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளை முறைப்படுத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ரியல் எஸ்டேட், குடியிருப்பு, அலுவலக கட்டுமான நிறுவனங்களை கட்டுப்படுத்தும் அமைப்புக்கள் இல்லை. அத்துடன் ரியல் எஸ்டேட் துறையில் முன்பு சிறிய அளவு நிறுவனங்கள் மட்டுமே ஈடுபட்டு வந்தன.

இப்போது கம்பெனிகள் சட்டப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், அந்நிய நாட்டு கூட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஈடுபடுகின்றன. இவை பங்குகளை வெளியிட்டு பொதுமக்களிடம் முதலீடு திரட்டுகின்றன. அத்துடன் இந்த நிறுவனங்களில் அந்நிய முதலீடு நிறுவனங்கள், தனிப்பட்ட முதலீடு ஆகிய வழிகளிலும் முதலீடு திரட்டுகின்றன.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் முன்பு காலிமனைகளை மட்டும் விற்பனை செய்வதுடன் அதன் பணியை முடித்துக் கொண்டன. இப்போது இவை வணிக வளாகம், திரை அரங்கு, பொழுது போக்கு பூங்கா, கல்வி நிலையம் உட்பட எல்லா வசதிகளும் அடங்கிய நகரியத்தை அமைத்து வருகின்றன.

இது போன்ற காரணங்களினால், பொது மக்களை பாதுகாக்கவும், இந்த துறையில் ஈடுபடும் நிறுவனங்களை கட்டுப்படுத்தவும் ரியல் எஸ்டேட் துறைக்கு சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து அரசு, தொழில் துறையின்ர், ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் உள்ளத

ஏற்கனவே மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ். ஜெயபால் ரெட்டி ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் மாநாட்டில் பேசும் போது, ரியல் எஸ்டேட், கட்டுமானத்துறைகளை ஒழுங்கு படுத்த, மத்திய அரசு ஒழுங்கு முறை ஆணையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது. இது அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும் கூறியிருந்தார்.

ரியல் எஸ்டேட் துறையினரும் அமைச்சரின் கருத்தை வரவேற்றனர்.

இந்நிலையில் மாநிலங்களவையில் நேற்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி, தலைநகர் டெல்லியில் ரியல் எஸ்டேட் துறையை ஒழுங்குபடுத்த அரசு சட்டம் கொண்டுவரப் போவதாக தெரிவித்தார்.

ரியல் எஸ்டேட் நிர்வாக (ஒழுங்குபடுத்துதல் மற்றும் கட்டுப்படுத்தல்) சட்டம் என்ற பெயரில் சட்டம் கொண்டுவரப்படும். இந்த சட்டம் தலைநகர் டெல்லிக்கு மட்டும் பொருந்தும்.

இது மற்ற மாநில அரசுகளும் ரியல் எஸ்டேட் துறைக்கான சட்டம் கொண்டுவருவதற்கான மாதிரி சட்டமாக இது இருக்கும்.

ரியல் எஸ்டேட் துறையை கட்டுப்படுத்துவது, கட்டுமான நிறுவனங்களை கட்டுப்படுத்துவது ஆகியவை மாநில அரசின் சட்ட வரம்பிற்குள் வருகிறது என்று கூறினார்.

வீட்டு மனை, குடியிருப்புக்கள், கட்டிடங்களின் விலை அதிகரித்து வருவது பற்றிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கும் போது, இந்த துறை அதிக வளர்ச்சி அடைவதாலும், சந்தை நிலவரத்தை பொறுத்து அமைகின்றது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்