தொழில் துறை உற்பத்தி சரிவு!

புதன், 12 மார்ச் 2008 (15:58 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தொழில் துறைக்கு பாதிப்பிற்குள்ளாகி வருகிறது. இதற்கு தேவையான கச்சாப் பொருட்களின் விலை ஏற்றம், ஏற்றுமதி பாதிப்பு, அத்துடன் உள்நாட்டு விற்பனை குறைந்தது உட்பட பல காரணங்களினால் தொழில் துறை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனவரி மாதம் தொழில் துறையின் உற்பத்தி 5.3 விழுக்காடாக குறைந்து விட்டது.

இது சென்ற வருடத்துடன் ஒப்பிடுகையில் பாதி அளவுக்கும் மேல் குறைவு. சென்ற வருடம் ஜனவரி மாதம் தொழில் துறை உற்பத்தி 11.6 விழுக்காடாக இருந்தது.

தொழில் துறை உற்பத்தி கணக்கீடு, ஒவ்வொரு தொழில் வாரியாக உற்பத்தியின் அளவை கணக்கெடுத்து கணிக்கப்படுகிறது. இதை தொழில் துறை உற்பத்தி குறியீட்டு அட்டவணை (ஆங்கிலத்தில் இன்டெக்ஸ் ஆப் இன்டஸ்டிரியல் புரடக்சன்) என குறிப்பிடுகின்றார்கள்.

இந்த நிதி ஆண்டில் (2007-08) முதல் 10 மாதத்தில் தொழில் துறை உற்பத்தி 8.7 விழுக்காடாக இருந்தது (இது சென்ற ஆண்டு இதே பத்து மாதத்தில் 11.2 விழுக்காடு ) என மத்திய அரசின் புள்ளிவிபர நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகார பூர்வ புள்ளி விபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஜனவரி மாதம் சுரங்கம், மின் உற்பத்தி போன்ற தொழில் துறைகளின் உற்பத்தி சிறிது குறைந்துள்ளது. அதே நேரத்தில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 10 மாதங்களில் அதிக அளவு பாதிக்கப்பட்டுள்ளது.

சென்ற வருடம் ஜனவரியில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 5.3 விழுக்காடு இருந்தது, இது இந்த வருடம் 3.1 விழுக்காடாக குறைந்துள்ளது. ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான பத்து மாதத்தில் நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி 1.7 விழுக்காடாக குறைந்துள்ளது. (இது சென்ற ஆண்டு 10.6 விழுக்காடு)

தொழில் துறை உற்பத்தி குறியீட்டு அட்டவணையில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது இயந்திரம், தளவாடம், வாகனம் போன்றவை அடங்கிய உற்பத்தி பிரிவு. இதன் வளர்ச்சி ஜனவரி மாதம் 5.9 விழுக்காடாக இருக்கின்றது (இது சென்ற ஆண்டு ஜனவரி மாதம் 12.3 விழுக்காடு).

ஜனவரியில் மின் உற்பத்தி 3.3 விழுக்காடாக குறைந்துள்ளது. (இது சென்ற ஆண்டு ஜனவரி 8.3 விழுக்காடு)

வெப்துனியாவைப் படிக்கவும்