சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் இ.பி.சி நிறுவனம் பங்கு சந்தையில் ரூ.165 கோடி முதலீடு திரட்ட உள்ளது. இதற்காக இந்நிறுவனம் 50 லட்சம் பங்குகளை வெளியிடுகிறது. பத்து ரூபாய் முகமதிப்புள்ள ஒரு பங்கின் விலை ரூ.290 முதல் ரூ.330 வரை என நிர்ணயித்துள்ளது.
இந்த பங்குகளுக்கு ஜனவரி 1 ந் தேதி முதல் பிப்ரவரி 1 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இந்நிறுவனத்தின் செயல் இயக்குநர் எம். அம்ஜத் ஷெரிப் பங்கு வெளியீடு பற்றி செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்த பங்கு வெளியீடு மூலம் ரூ.144 முதல் ரூ.165 கோடி திரட்ட போகின்றோம். இந்த நிதியைக் கொண்டு துணை நிறுவனங்களின் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ளப்படும். அத்துடன் குழாய் மைக்கும் பணிக்கு இயந்திரங்கள் வாங்கப்படும்.சிறிய அளவு நிதி மற்ற தொழிற்சாலைகளை கையகப்படுத்தவும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டமுள்ளது.
எங்களின் துணை நிறுவனங்களான ஸ்ரீராம் லெய்ட்வைன்ட் லிமிடெட், லெய்ட்னர் ஸ்ரீராம் மேனுபெக்சரிங் லிமிடெட், ஓரியன்ட் கிரின் பவர் கம்பெனி ஆகியவற்றில் தலா ரூ.50 கோடி முதலீடு செய்யப்படும்.
இந்த பங்கு வெளியீட்டில் 60 விழுக்காடு தகுதி பெற்ற முதலீட்டு நிறுவனங்களுக்கும், 30 விழுக்காடு சில்லரை முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
இந்த பங்கு வெளியீட்டிற்கு மோதிலால் ஓஸ்வால் இன்வெஸ்ட்மென்ட் அட்வைசர் பிரைவேட் லிமிடெட் துணை லீட் மேனெஜர்களாக உள்ளனர். இந்த பங்கு வெளியீட்டிற்கு நிதி ஆய்வு நிறுவனமான கிரிசல் ஐந்தில் மூன்று என்ற அந்தஸ்து வழங்கியுள்ளது.