ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களில் எவ்வித மாற்றமும் செய்யாதது சரியே என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.
ரிசர்வ் வங்கி இன்று காலாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.
ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை குறித்து சிதம்பரம் கருத்து தெரிவிக்கையில், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை சரியே என்று கூறினார்.
அவர் மேலும் கூறும் போது, அமெரிக்காவில் உள்ள வட்டி விகிதத்திற்கும், இந்தியாவில் உள்ள வட்டி விகிதத்திற்கும் அதிக இடைவெளி உள்ளது. இதனால் மட்டுமே இந்தியாவிற்கு அதிக முதலீடு வந்துவிடும் என்று கூறிவிட முடியாது.
இந்தியாவில் அதிக அளவு அந்நிய முதலீடு குவிவதை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி ஆளுநர் ஒய்.வி.ரெட்டியுடன் ஆலோசனை நடத்துவேன். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு வாய்ப்பு இல்லை.
அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்த காரணத்தினால், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள வட்டி விகிதம் அதிக அளவு வித்தியாசம் ஏற்பட்டது. இதனாலேயே அந்நிய முதலீடு வந்து விடும் என்று கூறிவிட முடியாது. நமக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. மதில் மேல் உள்ள பூனை எந்த பக்கமும் குதிக்கலாம். அந்நிய முதலீடு அதிகரிக்கலாம். அமெரிக்க உட்பட வெளிநாடுகளில் நிதி, முதலீட்டு நிறுவனங்கள் பணம் செலுத்த வேண்டியதுள்ளது. அதனால் இங்குள்ள முதலீட்டை திரும்ப கொண்டு போகலாம்.
ரிசர்வ் வங்கி ஆளுநர் கூடிய விரைவில் டெல்லி வருகை தர உள்ளார். அப்போது நாங்கள் ரிசர்வ் வங்கியுடன் அந்நிய முதலீட்டை கட்டுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிப்போம். ரிசர்வ் வங்கியின் அணுகுமுறைக்கு நான் ஆதரவு தெரிவிக்கின்றேன். ரிசர்வ் வங்கி ஆளுநர் விலை வாசி உயராமல் இருக்க தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளார். கடன் வழங்குவதை குறிப்பாக வேலை வாய்ப்பு அளிக்கும் துறைகளுக்கு துரிதப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். தொழில் துறை உற்பத்தி குறைந்து இருந்தாலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் குறையாது. உணவு அல்லாத மற்ற துறைகளின் கடன் கொடுப்பது குறைந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியின் முந்தைய கொள்கைகளே காரணம். ஆயினும் வங்கிகளின் வைப்பு நிதி, பணப்புழக்கம் அதிகரித்து உள்ளது என்று கூறினார்.