வட்டி குறைப்பு இல்லை : ரிசர்வ் வங்கி!

செவ்வாய், 29 ஜனவரி 2008 (17:48 IST)
கடன் மீதான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை.

அமெரிக்க ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டி விகிதத்தை குறைத்து வருவதை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கியும் வட்டியை குறைக்கும் என்று பங்குச் சந்தை வட்டாரம், நிதிச் சந்தையில் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டியை குறைக்கவில்லை. வட்டி விகிதம் 6 விழுக்காடாகவே தொடரும்.

அதேபோல் ரிபோ ரேட் எனப்படும் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் கடன் மீதான வட்டி விகிதம் முன்பு இருந்த மாதிரியே 7.75 விழுக்காடகவே தொடரும்.

ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் வட்டியான ரிவர்ஸ் ரிபோ வட்டி விகிதம் முன்பு இருந்த மாதிரியே 7.75 விகிதம் தொடரும் என ரிசர்வ் வங்கி கவர்னர் ஒய்.வி. ரெட்டி அறிவித்தார்.

இன்று பகல் 12 மணியளவில் மூன்றாவது காலாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.

அப்போது அவர் பேசுகையில், நிதிச் சந்தையில் அதிக அளவு பண்ப்புழக்கம் இருந்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் வகையில் மிக கவனத்துடன் பொருளாதார கொள்கை உள்ளது.

எல்லா சூழ்நிலையிலும் மூலதன கணக்கில் இருந்து பணம் வெளியேறுவது, உள்நாட்டுக்குள் வருவதை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது. ஆனால் யாரும் எதிர்பாராத சம்பங்களால் பாதிக்கப்பட்டால் அது வேறு விஷயம் என்று கூறிப்பிட்டார்.

அவர் மேலும் பேசுகையில், உற்பத்திதுறையின் வளர்ச்சி மந்தகதியில் உள்ளது. சென்ற ஆண்டு இதே கால கட்டத்தில் 10.9 விழுக்காடாக இருந்தது. ஆனால் இந்த நிதி ஆண்டில் ஏப்ரல் முதல் நவம்பர் மாதம் வரை 8 மாதகாலத்தில் 9.2 விழுக்காடாக குறைந்துள்ளது. இதை அதிகரிக்க உள்நாட்டு உற்பத்திதுறையை நவீனமயமாக்க வேண்டும்.

வர்த்தக வங்கிகள் அதிக அளவு வேலை வாய்ப்பு வழங்கும் துறைகளுக்கு கடன் வழங்கும் கொள்கை மற்றும் விதிமுறைகளை மாற்ற வேண்டும். அதே நேரத்தில் அவை பணம் திரும்பி வசூலாவது, வங்கிகளின் இலாபம் ஆகியவற்றையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இந்த வருடம் உள்நாட்டு மொத்த உற்பத்தியின் அளவு (பொருளாதார வளர்ச்சி) 8.5 விழுக்காடு தொடர்ந்து நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி கருதுகிறது. இதே மாதிரி பணவீக்கம் 5 விழுக்காடுக்கு மேல் அதிகரிக்காது என எதிர்பார்க்கிறது. இது நான்கு முதல் 4.5 விழுக்காடு வரை இருக்கலாம் என கருதுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்