ஃப்யூச்சர் கேப்பிடல் ஹோல்டிங் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு வெளியீட்டுக்கு 133 மடங்கு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளன.
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தையில், பங்குகளின் விலை குறைந்து, குறியீட்டு எண்கள் குறைந்து வந்தது. ஆனால் இது புதிய பங்கு வெளியீட்டில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
ஃப்யூச்சர் கேப்பிடல் ரூ.490 கோடி திரட்ட பங்குகளை வெளியிட்டது. இதன் ஒரு பங்கு விலை ரூ.700 முதல் ரூ.765 வரை என்று அறிவித்தது. (அதாவது பங்குக்கு விண்ணப்பம் அனுப்புபவர்கள், இந்த இடைப்பட்ட விலைகளில் எந்த விலையை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம். மொத்தமாக வரும் விண்ணப்பங்களின் விலைக் கேட்பை வைத்து, சராசரி விலையில் பங்குகள் ஒதுக்கப்படும்) இந்த பங்கு வெளியீடு மூலம் இதன் நிறுவனர்கள் தங்கள் வசம் இருந்த பங்குகளில் 10.16 விழுக்காடு விற்பனை செய்கின்றனர்.
இதில் முதலீட்டு நிறுவனங்களில் இருந்து, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 60 விழுக்காடு பங்குகளுக்கு 107 மடங்கு விண்ணப்பம் வந்துள்ளது. இதே போல் சிறு முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட 30 விழுக்காடு பங்குகளுக்கு 27 மடங்கு விண்ணப்பம் வந்துள்ளது. அதிக செல்வம் உள்ள தனி நபர் முதலீட்டாளர்களிடம் இருந்து 33 மடங்கு விண்ணப்பம் வந்துள்ளது.