இந்தியா-ஓமன் 10 கோடி டாலர் முதலீட்டு நிதி!

திங்கள், 14 ஜனவரி 2008 (11:56 IST)
இந்தியாவுக்கும், ஓமனுக்கும் இடையே பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த 10 கோடி டாலர் முதலீட்டு நிதி அமைக்கப்பட உள்ளது.

ஓமனுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஓமன் துணை பிரதமர் சையத் பக்த் பின் முகமது அல் சந்தித்து நீண்ட நேரம் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி நீண்ட நேரம் விவாதித்தார். அப்போது, இரு நாடுகளுக்கு இடையே உள்ள பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆலோசிக்கப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைகளில் முதலீடு அதிகப்படுத்த 10 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் முதலீட்டு நிதியை உருவாக்குவது, இந்த நிதியை கொண்டு இரு நாடுகளிலும் உயர் கல்வி, தகவல் தொழில் நுட்பம், தகவல் தொடர்பு, அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் முதலீடு செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

சென்ற வருடம் ஓமன் துணை பிரதமர் இந்தியாவிற்கு வருகை தந்தார். அப்போது, இருநாடுகளுக்கும் இடையே சிறு தொழில் நடுத்தர தொழில் மற்றும் உயர் கல்வி குறித்து நான்கு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அத்துடன் பொருளாதார ஒத்துழைப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. நேற்று நடந்த கூட்டத்தில், இவற்றின் முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்