சேலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் - மத்திய அரசு அனுமதி!

Webdunia

புதன், 2 ஜனவரி 2008 (18:25 IST)
இந்திய உருக்கு ஆணையம் சேலத்தில் அமைக்க திட்டமிட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம் உட்பட 34 சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

இன்று சிறப்பு பொருளாதார மண்டல அனுமதி வழங்கும் ஆணையத்தின் கூட்டம் நடந்தது. இதற்கு மத்திய வர்த்தக அமைச்சகத்தின் செயலாளர் ஜி.கே. பிள்ளை தலைமை தாங்கினார்.

இதில் 30 சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது. மேலும் நான்கு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கொள்கையளவில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்த ஆணையத்தின் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் ஜி.கே.பிள்ளை கூறியதாவது. ஏற்கனவே 187 சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி வழபங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.56 ஆயிரம் கோடி முதலீடு செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆணடில் 1 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.

கோவா மாநில அரசு அந்த மாநிலத்தில் அமைக்கப்பட உள்ள 12 சிறப்பு பொருளாதார மண்டளங்களின் அனுமதியை ரத்து செய்யும் படி கூறியது. இதில் ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள பென்னிசூலா பார்மா ரிசர்ச் சென்டர், மெடிடேப் ஸ்பெஷாலிட்டிஸ் மற்றும் கே. ராகிஜா கார்ப்பரேசன் ஆகிய மூன்று சிறப்பு பொருளாதார மண்டலங்களின் அனுமதியை திரும்ப பெறும் படி மத்திய அரசை கோவா மாநில அரசு கேட்டுக் கொண்டது.

இது குறித்து ஜி.கே.பிள்ளை கூறும் போது, கோவா மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கு அதிகாரபூர்வமாக வழங்கிய உள்ள அனுமதியை மத்திய அரசு ரத்து செய்யாது. ஒரு முறை அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டால், அதை திரும்ப பெற சட்டத்தில் இடம் இல்லை. இந்த மாநிலத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கான அனுமதியை ரத்து செய்யும் படி மாநில அரசிடம் இருந்து, மத்திய வர்த்தக அமைச்சகத்திற்கு எந்த தகவலும் வரவில்லை என்று கூறினார்.

கோவாவைச் சேர்ந்த பல்வேறு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புக்கள் சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் அந்த மாநிலத்தில் பயணம் மேற்கொண்ட போது, சிறப்பு பொருளாதார மண்டலத்தை அமைக்க கூடாது என்று கூறி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அத்துடன் இந்த அமைப்புக்கள் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தின. இத்துடன் பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்ததால், மாநில அரசு சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அனுமதி வழங்குவதில்லை என்று சென்ற வாரம் அறிவித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்