வாட் எதிர்ப்பு:வியாபாரிகள் உண்ணாவிரதம்!

வியாழன், 27 டிசம்பர் 2007 (11:22 IST)
மதிப்பு கூட்டு வரியை (வாட்) அமல்படு்த்துவதை எதிர்த்து இரண்டாவது நாளாக வியாபாரிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

உத்தர பிரதேச மாநில அரசு வருகின்ற ஜனவரி மாதம் முதல் வாட் என்று அழைக்கப்படும் மதிப்பு கூட்டு வரியை அமல்படுத்த போகிறது. இது வியாபாரிகளுக்கு எதிரானது என்று வியாபாரிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உத்தர பிரதேஷ் உத்யோக் வியாபார் பிரதிநிதி மண்டல் (உத்தர பிரதேச மாநில வியாபாரிகள் கூட்டமைப்பு) என்ற வியாபாரிகள் சங்கம் வாட் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து நான்கு நாட்கள் உண்ணாவிரத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருந்தது.
உத்தர பிரதேச சட்டமன்ற வளாகத்திற்கு முன்பு வாட் வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று இரண்டாவது நாளாக வியாபாரிகள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இந்த உண்ணாவிரதம் 29 ந் தேதி வரை தொடரும்.

இதேபோல் பல மாவட்ட தலைநகரங்களிலும் வியாபாரிகள் உண்ணாவிரம் இருந்து வருகின்றனர். வியாபாரிகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.என்.அகர்வால் கூறுகையில், வாட் வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வரும் போது, அதிகாரிகளால் வியாபாரிகள் துன்புறுத்தப்படுவார்கள். புதிய வரி விதிப்பு முறை வந்த பிறகு இன்ஸ்பெக்டர் ராஜ்ஜியம் (அதிகாரிகள்) தானாகவே வந்து விடும் என்று கூறினார்.

அடுத்த வருடம் ஜனவரி 1 ந் தேதியில் இருந்து வாட் வரி விதிப்பு முறையை மாநில அரசு அமல்படுத்துவதை தடுக்கும் படி பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வியாபாரிகள் சங்கத்தினர் கோரிக்கை மனுவை அனுப்பி உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்