மத்திய நிதி நிலை அறிக்கையில் (பட்ஜெட்) அதிகளவு வரி உயர்வு இருக்காது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.
மும்பையில் " சேவை வரி -அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்" என்ற புத்தகத்தை வெளியிட்டு பேசுகையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி பொறுப்பேற்ற மூன்றரை வருடங்களில் வரி வருவாய் அதிகளவு உள்ளது. அரசு நிதி நிர்வாகத்தை பலப்படுத்தவும், வரி வருவாயை அதிகரிக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்தது. இதற்காக புதிய சட்டங்கள் இயற்றப் பட்டன. நிர்வாக ரீதியான் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.
கடந்த மூன்றரை வருடங்களில் வரி வருவாய் சிற்ப்பாக இருக்கின்றது. வரி செலுத்துபவர்களுக்கு உரிய மரியாதை கொடுத்ததால் வரி வசூல் அதிகரித்துள்ளது என்று கூறிக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்று சிதம்பரம் கூறினார்.
இந்தியாவில் வரி வருவாய் அதிகரிப்பதில் சேவை வரி வருவாய் மிக அதிகமாக உயர்ந்து வருகிறது. முதன் முதலில் சேவை வரி 1994-95ம் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது ரூ.407 கோடி வசூலானது. இந்த நிதியாண்டில் சேவை வரி வருவாய் 50 ஆயிரத்து 200 கோடியை தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் நிதி தலைநகர் என்று கருதப்படும் மும்பையில் சேவை வரியாக சுமார் ரூ.19 ஆயிரம் கோடி வசூலாகிறது. இது நாட்டின் மொத்த சேவை வரி வசூலில் 38 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.