இந்தியாவில் இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் அந்நிய நேரடி முதலீடு 720 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு வந்துள்ளது.
சர்வதேச அளவில் அந்நிய நேரடி முதலீடு பற்றிய ஏ.டி.கென்ரி என்ற அமைப்பு ஆய்வு நடத்துகிறது. ஏ.டி.கென்ரி எப்.டி.ஐ. கான்பிடென்ஸ் இன்டெக்ஸ்-2007 என்று அழைக்கப்படும் இந்த ஆய்வில் இருந்து சர்வதேச அளவில் அந்நிய முதலீடு பெறுவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வின் முடிவுகளை நேற்று மத்திய வர்த்தக அமைச்சர் கமல்நாத் வெளியிட்டார். அப்போது அவர் பேசும் போது அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்ந்து அதிகளவில் வருகின்றன. அந்நிய முதலீடுகளை பெறுவதில் சீனா முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கின்றது. அமெரிக்கா, ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் அதிக முதலீடு செய்கின்றனர். அது போ்லவே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர் என்று கூறினார்.
இந்தியாவில் சென்ற நிதியாண்டில் (2006-07) 157 கோடி டாலர் அந்நிய நேரடி முதலீடு வந்தது. இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில் வோடோபோன் மொரிஷியஸ், மாட்சுஸ்தா எலக்ட்ரிக் ஒர்க்ஸ், ஜி.ஏ.குளோபல் இன்வெஸ்ட்மென்ட், எம்மார் ஹோல்டிங், மிரில் லயின்ச் ஆகிய ஐந்து நிறுவனங்கள் அதிக அளவு முதலீடு செய்துள்ளன. அந்நிய நேரடி முதலீடு பெறுவதில் முதல் இடத்தில் சேவை துறையும், அடுத்து தொலைபேசி, ரியல் எஸ்டேட் துறை உள்ளது.