கடந்த ஒரு ஆண்டிற்குள் நாட்டின் சர்க்கரை விலை சுமார் 30 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. உள் நாட்டுச் சந்தைகளில் சர்க்கரை கையிருப்பை போதுமான அளவிற்கு அரசு பராமரித்து வந்தபோதிலும் விலை உயர்வை தடுக்க முடியவில்லை.
நுகர்வோர் விவகார அமைச்சகத்தின் தக்வல்களின்படி, முக்கிய நகரங்களில் சர்க்கரை விலை ஜனவரி 23ஆம் தேதியன்று கிலோவிற்கு ரூ.21- 22 என்று விற்கப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டில் சர்க்கரை விலை இதே நகரங்களில் கிலோவிற்கு ரூ.16 அல்லது ரூ.17ஆக மட்டுமே இருந்தது.
2008- 09 ஆம் ஆண்டில் உற்பத்தி குறையலாம் என்று எதிர்பார்க்கப்பட்டதால் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் சர்க்கரை விலை அதிகரித்ததாக இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர்.
டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய முக்கிய நகரங்களில் கடந்த ஆண்டில் சர்க்கரை விலை கிலோவிற்கு ரூ.5 அதிகரித்துள்ளது.
முக்கிய நகரங்கள் மட்டுமல்லாது மற்ற நகரங்களில் கூட சர்க்கரை விலை ரூ.5 முதல் ரூ.6 வரை அதிகரித்துள்ளது.