பங்குச்சந்தை- சென்செக்ஸ் குறியீடு இன்றைய சந்தை நேர முடிவில் 385 புள்ளிகள் குறைந்து 9,734 ஆக நிலைப்பெற்றது. தேச பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 102 புள்ளிகள் சரிந்து 2,892 ஆக இருந்தது.
PTI Photo
FILE
இன்று காலை வர்த்தகம் தொடங்கிய போதே 365 புள்ளிகள் சரிவுடன் துவங்கிய சென்செக்ஸ், தொடர்ந்து சரிவுப் பாதையிலேயே பயணித்தது. ஒருகட்டத்தில் 485 புள்ளிகள் சரிந்து 9,635 வரை சென்றாலும், பின்னர் உயர்வைச் சந்தித்து 10,109 புள்ளிகள் வரை அதிகரித்தது.
பணவீக்கம் உயர்வு எதிரொலி: எனினும் குறைந்த கால லாப நோக்கில் வாங்கப்பட்ட பங்குகள் விற்கப்பட்டதன் காரணமாகவும், பணவீக்கம் உயர்வு காரணமாகவும் மீண்டும் சென்செக்ஸ், நிஃப்டி குறியீடுகள் வீழ்ச்சியை சந்தித்தன. முடிவில், சந்தை நிறைவின் போது சென்செக்ஸ் 9,734 புள்ளிகளாக நிலைப்பெற்றது.
பி.எஸ்.இ. உலோகப் பிரிவுக குறியீடு 8.5 சதவீதம் சரிந்து 4,993 ஆகவும், எண்ணெய்-எரிவாயு பிரிவு குறியீடு 4.8 சதவீதம் சரிந்து 5,817, தகவல் தொழில்நுட்ப பிரிவு குறியீடு 4 சதவீதம் சரிந்து 2,618 புள்ளிகளாகவும் நிலைப்பெற்றன.
மும்பை பங்குச்சந்தையில் இன்று விற்கப்பட்ட 2,585 நிறுவனப் பங்குகளில், 1,633 நிறுவனங்கள் விலை சரிவையும், 869 நிறுவனங்கள் விலை உயர்வையும் சந்தித்துள்ளன.
டாடா ஸ்டீல் நிறுவனம் 13.7% விலை சரிந்து ரூ.186 ஆகவும், ஸ்டெர்லைட் நிறுவனம் 11% சரிந்து ரூ.238, ஹிண்டல்கோ நிறுவனம் 7.5% சரிந்து ரூ.57, டாடா மோட்டார்ஸ் பங்குகள் 12% சரிந்து ரூ.159, ரிலையன்ஸ் பங்குகள் 7.7% சரிந்து 1,172 ஆகவும் இருந்தன.
பார்தி ஏர்டெல், விப்ரோ, இன்போசிஸ், ஹெச்.டி.எஃப்.சி. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், எஸ்.பி.ஐ. ஆகிய நிறுவனப் பங்குகளும் இன்று குறிப்பிடத்தக்க அளவு விலை சரிந்துள்ளன.
எனினும் துவக்கத்தில் சரிவைச் சந்தித்த ஜெய்ப்பிரகாஷ் அசோசியேட் நிறுவனப் பங்கு இறுதியில் 4% விலை உயர்ந்து ரூ.84 ஆகவும், ரான்பாக்ஸி பங்குகள் 3.7% உயர்ந்து ரூ.216 ஆகவும், ஹிந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் 3% உயர்ந்து ரூ.245 ஆகவும், டி.எல்.எஃப். பங்குகள் 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.271 ஆகவும் இருந்தன.