மும்பை:பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.
காலையில் 10.13 மணியளவில் நிஃப்டி 101.30, சென்செக்ஸ் 478 புள்ளிகள் சரிந்தன.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன்ஸ் 514.45, நாஸ்டாக் 80.93, எஸ் அண்ட் பி 500-58.27 புள்ளிகள் குறைந்தன.
இதே போல் ஐரோப்பிய நாடுகளி ல் எல்லா பங்குச் சந்தைகளும் சரிவையே சந்தித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-188.84 புள்ளிகள் குறைந்தது.
இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள் காலாண்டு இலாப-நஷ்ட கணக்கை வெளியிட துவங்கியுள்ளன. இவற்றின் வருவாய் எதிர்பார்த்த அளவு இல்லை. அத்துடன் குறைந்துள்ளது. மக்களின் அத்தியாவசிய பொருட்களான உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது.
இதனால் மக்களின் வாங்கும் சக்தி குறைந்துள்ளது. பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் வருவாய் பாதிக்கப்படும்.
ஆதலால் இவைகளின் பங்குகளின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
இந்த நெருக்கடி பங்குச் சந்தைகளில் மட்டுமல்லாமல், பண்டக சந்தையிலும் எதிரொலித்தது. தொழில் துறைக்கு தேவையான உருக்கு,. தாமிரம், அலுமினியம் போன்ற உலோகங்களின் விலையும் குறைந்து வருகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பாக முதலீடு செய்யும் தங்கத்தின் விலையும் நேற்று மேலும் குறைந்தது. நியுயார்க் ரொக்க சந்தையில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 743.45 டாலராக குறைந்தது. இது முந்தைய நாள் விலையை விட 3% குறைவு.
காலை 10.34 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 87.50 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 2977.65 ஆக குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.23 மணியளவில் சென்செக்ஸ் 356.06 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,813.84 ஆக குறைந்தது.
இதே போல் மிட் கேப் 109.59, சுமால் கேப் 115.96, பி.எஸ்.இ. 500- 126.90 புள்ளிகள் குறைந்தன.
இன்று ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் கடந்த நான்கு ஆண்டுகதளில் இல்லாத அளவிற்கு குறைந்தது. ஹாங்காங்கின் ஹாங்செங் 663.35, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 67.92, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 86.54, ஜப்பானின் நிக்கி 481.43, சீனாவின் சாங்காய் காம்போசிட் 49.92, புள்ளிகள் சரிந்தன.
மும்பை பங்குச் சந்தையில் காலை 10.43 மணியளவில் 349 பங்குகளின் விலை அதிகரித்தும், 1469 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 52 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று 543.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 404.05 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
இன்று பங்குச் சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்து, குறைந்து வந்த குறியீட்டு எண்கள், அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. இன்று நாள் முழுவதும் இதே நிலை நீடிக்கும் என்று தெரிகிறது.