பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்!

திங்கள், 13 அக்டோபர் 2008 (11:10 IST)
மும்பை:பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

காலை 10.00 மணியளவில் நிஃப்டி 88.75, சென்செக்ஸ் 344 புள்ளிகள் அதிகரித்தன.

கடந்த வாரம் பங்குச் சந்தைகளின் ஏற்பட்ட வீழ்ச்சியை தொடர்ந்து, பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுக்கும் என்று நிதி அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி அளித்துள்ளார்.

இதன்படி வங்கிகள் ரிசர்வ் வங்கியில் இருப்பாக வைக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை மேலும் குறைக்கும். அத்துடன் வட்டி விகிதத்தையும் குறைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வாரம் ஒன்றரை விழுக்காடு வங்கிகளின் கையிருப்பு விகிதத்தை குறைத்துள்ளது. இதனால் நிதிச் சந்தையில் பணப்புழக்கம் ரூ.60 ஆயிரம் கோடி அதிகரிக்கும்.

இதே போல் பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியும், பங்குச் சந்தையின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்த சார்ட் செல்லிங் முறைக்கு கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளது.

வாஷிங்டனில் ஜி-20 நாடுகளின் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்குச் சந்தை, வங்கிகளின் பணப்புழக்கத்தை அதிகரித்தல், தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான நிதி கிடைக்கச் செய்வது, வங்கிகளில் பணம் போட்டுள்ள பொதுமக்களின் பணத்திற்கு பாதுகாப்பளிப்பது உட்பட பல நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள நாடுகளும் முடிவெடுத்துள்ளன. இதனால் தற்போதையி நெருக்கடிக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன்ஸ் 128.00, எஸ் அண்ட் பி 500- 10.70 புள்ளிகள் குறைந்தது. அதே நேரத்தில் நாஸ்டாக் 04.39 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் முன்னேற்றமில்லை. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-381.74 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.32 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 97.50 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3377.45 ஆக உயர்ந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 382.68 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,910.53 ஆக அதிகரித்தது.

இதே போல் மிட் கேப் 94.37, சுமால் கேப் 118.94, பி.எஸ்.இ. 500- 127.32 புள்ளிகள் அதிகரித்தன.

இன்று காலை ஆசிய பங்குச் சந்தைகளில் ஜப்பான்,சீனா தவிர மற்றிவைகளில் சாதகமாக இருந்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 478.80,சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 38.72, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 34.76 புள்ளிகள் அதிகரித்தது.

ஜப்பானின் நிக்கி 49.77, சீனாவின் சாங்காய் காம்போசிட் 38.11 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.46மணியளவில் 1292 பங்குகளின் விலை அதிகரித்தும், 686 பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. 49 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.
அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை 2,513.74 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் 1,744.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இன்று பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. சென்செக்ஸ் 11 ஆயிரத்தை தாண்டிவிடும் என்று தெரிகிறது. பங்குச் சந்தையில் சென்ற வாரம் இருந்த நிலை மாறிவிடும். இன்று எந்த பிரிவு குறியீட்டு எண்களும் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்