பங்குச் சந்தையில் சரிவு!

புதன், 17 செப்டம்பர் 2008 (10:55 IST)
தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, இன்றும் பல பிரிவு குறீயிட்டு எண்களும் குறைந்தன.

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்களான லெக்மான் பிரதர்ஸ் ஹோல்டிங், மெரில் லாஞ்ச் ஆகிய இரு நிறுவனங்களும் கடுமையான நஷ்டத்தை சந்தித்தன. இதில் லெக்மான் நிறுவனம் திவாலா தாக்கீது கொடுத்தது. மெரில் லாஞ்ச் நிறுவனத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட, இதை பேங்க் ஆப் அமெரிக்கா வாங்கியது.

அமெரிக்க இன்ஷ்யூரன்ஸ் குரூப் நிறுவனம் நஷ்டம் அடைவதை தடுக்க அமெரிக்க ரிசர்வ் வங்கி 85 பில்லியன் கடன் வழங்குவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் முன்னணி நிதி, முதலீட்டு நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, இந்தியா உட்பட மற்ற நாடுகளின் பங்குச் சந்தைகளையும் பாதித்துள்ளது. நேற்று அமெரிக்க பங்குச் சந்தையில் முன்னேற்றம் இருந்தது. ஆனால் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்தன.

ஆனால் இன்று ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இரண்டு விதமான போக்கு இருந்தது.

ஹாங்காங் உட்பட பல நாட்டு பங்குச் சந்தைகளும் பாதிக்கப்பட்டன. ஆனால் ஜப்பானின் நிக்கி 146.51, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 37.42 புள்ளி அதிகரித்தது.

இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையும் தொடர்ந்து சரிவையை சந்தித்து வருகிறது. குறிப்பாக அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றன.

காலை 10.30 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 129.45 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,389.35 ஆக குறைந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 34.05 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4040.85 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 0.97, பி.எஸ்.இ. 500- 31.69 புள்ளி குறைந்தது. சுமால் கேப் 20.98 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.35 மணியளவில் 872 பங்குகளின் விலைகள் அதிகரித்தது. 944 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 63 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

இன்று காலை வர்த்தகத்தில் நுகர்வோர் பொருட்கள், வங்கி, ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி, வங்கி, மின் உற்பத்தி பிரிவு பங்குகள் குறிப்பிட்ட அளவு குறைந்தன.

இன்று பங்குச் சந்தை பெரிய அளவில் சரிவைச் சந்திக்காது என்றே தெரிகிறது. ஆனால் அதிக ஏற்ற இறக்கம் இருப்பதற்கு வாய்ப்பு உண்டு. அதே நேரத்தில் நண்பகலுக்கு பிறகு நிலைமை மாறுவதற்கு வாய்ப்பு உண்டு.

வெப்துனியாவைப் படிக்கவும்