மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன. இந்த நிலை சில நிமிடங்களே நீடித்தது.
பிறகு சென்செக்ஸ், நிஃப்டி பிரிவு குறியீட்டு எண்கள் குறைய துவங்கின.
காலையில் வர்த்தகம் தொடங்கிய போது 10 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 51 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 13,977.23 ஆகவும், நிஃப்டி 9 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4171.35 ஆக இருந்தது.
தகவல் தொழில் நுட்ப துறையின் முன்னணி நிறுவனமான இன்போசியஸ் ஜூன் 30 ஆம் தேதியுடன் முடிந்த இரண்டாவது காலாண்டின் நிகர லாபம் அதிகரித்துள்ளது. இதனால் ஐ.டி.துறை பங்குகளின் விலை உயர்ந்தது. ஆனால் மீண்டும் ஐ.டி.குறியீட்டு எண்கள் குறைய துவங்கின.
கச்சா எண்ணெய் விலை இன்று மீண்டும் 141 டாலராக அதிகரித்தது. கடந்த சில மாதங்களாக அதிகரித்து வந்த கச்சா எண்ணெய் விலை நேற்று 136 டாலராக குறைந்தது.
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான பிரேசிலில் பெட்ரோலிய துறை ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய போவதாக அறிவித்துள்ளனர்.
நைஜிரியாவில் பெட்ரோலிய துறப்பண கிணறுகளில் இருந்து கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய முடியாமல் உள்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் தடை ஏற்படுத்தி உள்ளனர். இந்த பிரச்சனை முடிவுக்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நிலைமை சீரடையவில்லை.
மேற்கு ஆசியாவில் ஈரான், இஸ்ரேலுக்கும் இடையே எழுந்துள்ள பதட்டம், ஈரான் அணு உலை தொடர்பான பிரச்சனைகளால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இது போன்ற காரணங்களினால் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.
இவை பங்குச் சந்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தின.
இன்று ஆசிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் சாதகமாகவும், மற்றவைகளில் பாதகமாகவும் இருந்தது.
ஆனால் நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் குறைந்தன.
இன்று பணவீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். பணவீக்கம் 11.75 விழுக்காட்டில் இருந்து 11.83 விழுக்கடாக இருக்கும் என்று தெரிகிறது. இது முந்தைய வாரத்தை விட அதிகம்.
அமெரிக்க அணு ஒப்பந்தத்தால் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி மேலும் சிக்கலாகி வருகிறது. இவையும் பங்குச் சந்தையில் பாதகத்தையே ஏற்படுத்தும்.
இது போன்ற காரணங்களினால் பங்குச் சந்தையில் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்களும் அடிக்கடி ஏற்ற இறக்கமாக இருக்கின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை 11 மணி நிலவரப்படி 1053 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 935 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 66 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 71.86 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 13,854.38 ஆக இருந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 11.50 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4150.70 ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 17.96 சுமால் கேப் 34.26 புள்ளி அதிகரித்தது. ஆனால் பி.எஸ்.இ. 500- 5.76 குறைந்தது.
நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,896.89 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.2,448.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.551.67 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.562.10 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.674.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.112.46 மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.
ஜூலை மாதத்தில் நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் 2,446.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.61,608.63 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண் குறைந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 122.80 புள்ளி குறைந்தது.
அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 81.58, எஸ்.அண்ட்.பி 500 -8.70 நாஸ்டாக் 22.96 புள்ளி அதிகரித்தது.
இன்று காலை ஆசிய நாடுகளில் சீனா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தன.
தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 27.92, ஜப்பானின் நிக்கி 74.49, ஹாங்காங்கின் ஹாங்சாங் 303.41, சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 30.50 புள்ளி அதிகரித்தது.
சீனாவின் சாங்காய் காம்போசிட் 38.84 புள்ளி குறைந்தது.