உணவு பொருட்கள் விலை உயரவில்லை!

வெள்ளி, 16 நவம்பர் 2007 (11:36 IST)
நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை சென்ற வாரம் அதிகரிக்கவில்லை என்று மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய நுகர்வோர் நலன் அமைச்சகம் நவம்பர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான வாரத்தில் உணவு பொருட்களின் விலை நிலவரத்தை கண்காணித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன்படி, சென்ற வாரத்தில் திருவனந்தபுரம் தவிர மற்ற பகுதிகளில் கோதுமையின் விலை அதிகரிக்கவில்லை.
சர்க்கரை விலை டில்லி, பாட்னா, ஹைதரபாத் ஆகிய மூன்று நகரங்களில் மட்டும் அதிகரித்துள்ளது. மற்ற நகரங்களில் அதிகரிக்கவில்லை.

சிறு பயறு விலை சென்னை, மும்பை ஆகிய இரண்டு நகரங்களில் அதிகரித்தது. அகமதாபாத், கொல்கத்தா, பாட்னா, பெங்களூர் ஆகிய நகரங்களில் குறைந்தது. மற்ற நகரங்களில் மாற்றமில்லை. துவரம் பருப்பு விலை கொல்கத்தாவில் குறைந்தது. அகமதாபாத், மும்பை, பாட்னா, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் அதிகரித்தது.

டில்லியில் கோதுமை, சிறு பயிறு, கடலை எண்ணெய், உருளை, பால் ஆகியவற்றின் விலை அதிகரிக்கவில்லை. அதற்கு முந்தைய வாரத்தில் இருந்த நிலையே இருந்தது. கடந்த ஒரு மாதமாக கடுகு, எண்ணெய், வனஸ்பதி, உப்பு விலை உயரவில்லை. கடந்த ஒரு வருடமாக கோதுமை மாவு விலை உயரவில்லை.

டில்லியில் கடந்த வாரத்தில் வெங்காயம் விலை குறைந்துள்ளது. அரிசி, சர்க்கரை விலை அதிகரித்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


வெப்துனியாவைப் படிக்கவும்