பின்னலாடை ஏற்றுமதி பாதிப்பு! வேலை இழக்கும் அபாயம்!
வியாழன், 13 நவம்பர் 2008 (15:38 IST)
அந்நிய நாடுகளில் இறக்குமதி குறைந்துள்ளதால், திருப்பூரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமைந்துள்ள பின்னலாடை நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான நெசவாலைகள், பின்னலாடை, ஆயத்த ஆடை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு உற்பத்தியாகும் நெசவாலை, விசைத்தறி, ஆயத்த ஆடை, பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தியாகும் பொருட்கள் குறிப்பிடத்தக்க அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதிலும் குறிப்பாக திருப்பூரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பின்னலாடை நிறுவனங்களில் உற்பத்தி செய்யும் பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இங்கு வேலை இல்லை என்பதை விட, வேலை செய்ய ஆட்கள் இல்லை என்ற நிலையே இருக்கும். எல்லா தொழிற்கூடங்களிலும் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற அறிவிப்பு பலகை தொங்கவிடப்பட்டு இருக்கும்.
ஆனால் இந்த நிலை மாறி, இங்குள்ள தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், திருப்பூர் ஏற்றுமதி 30 விழுக்காடு குறையும் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்குள்ள பின்னலாடை, அதன் தொடர்புடைய துணைத் தொழில் கூடங்களில் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் ஏற்கனவே சில தொழிற் கூடங்கள் முழமையாக மூடப்பட்டு விட்டன. பலவற்றில் வார வேலை நாட்கள், நேரம் குறைக்கப்பட்டுள்ளது. முன்பு வாரம் ஏழு நாட்களும், இரவு பகலாக நடந்து வந்த வேலை, தற்போது வாரத்திற்கு ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
இங்கு சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் வேலை பார்க்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியால், 20,000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
முன்பு பின்னலாடை தொழிற் கூடங்களில் வாரத்தின் எல்லா நாட்களிலும் வேலை நடக்கும். மின் தட்டுப்பாடு, உள்நாட்டு, வெளிநாட்டு விற்பனை பாதித்ததால், கடந்த செப்டம்பரில் இருந்து வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை நடைபெறுகின்றது. இத்துடன் வேலை நேரமும் குறைக்கப்பட்டுள்ளன.
பின்னலாடை தொழில் நெருக்கடியை தீர்க்கவும், வேலை இழப்பை தவிர்க்கவும் மத்திய, மாநில அரசுகள் உதவ முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஏற்றுமதி மதிப்பில் உள்நாட்டு வரிகளுக்காக திருப்பி கொடுப்பதை 8.8 விழுக்காட்டில் இருந்து 11 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும். தற்போது ஏற்றுமதி நிறுவனங்கள் வாங்கும் கடனுக்கு 11 விழுக்காடு வட்டி வசூலிக்கப்படுகிறது. இதை 6 விழுக்காடாக குறைக்க வேண்டும். மின்வெட்டால், டீசலை பயன்படுத்தி ஜெனரேட்டர் இயக்குவதற்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்ய வேண்டும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இந்த பகுதியில் அமைந்துள்ள பின்னலாடை, விசைத்தறி மற்றும் அதன் தொடர்புடைய தொழில் கூடங்களில் கணிசமான அளவு பெண்கள் வேலை பார்க்கின்றனர். குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெண்களும், இளைஞர்களும் வேலை பார்க்கின்றனர். இவர்களின் வேலை பறிபோகாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தை குறைக்க 1,100 பேரை வேலை நீக்கம் செய்தது. இதே போல் மற்ற விமான போக்குவரத்து நிறுவனங்களும் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளது என்ற தகவல் பரவியது. உடனே மத்திய விமான போக்கு வரத்து துறை அமைச்சர் தலையிட்டு, விமான போக்குவரத்து நிறுவனங்களிடம் பேசி, வேலை இழந்தவர்களுக்கு வேலை கிடைக்க உதவி செய்தார்.
விமான நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பறிகொடுத்தவர்கள், பின்னலாடை தொழிற்கூடங்களில் வேலை பார்க்கும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. இருப்பினும் மத்திய அமைச்சர் தலையிட்டு மீண்டும் வேலை கிடைக்கச் செய்து, அவர்கள் முகத்தில் புன்னகை பூக்கும் படி செய்தார். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்.
நமது பிரதமர் மன்மோகன் சிங் கூட, கத்தார், ஓமன் நாடுகளுக்கு சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு நேற்று நாடு திரும்பும் போது விமானத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசு தனியார் துறை விமான போக்குவரத்து நிறுவனங்களுக்கு செய்துள்ள உதவி, பணக்காரர்களுக்கு செய்த உதவி அல்ல. வேலை இழப்பை தடுத்து, வேலைகளை காப்பற்றுவதற்கு செய்த உதவிதான்.
இதை வேலை வாய்ப்பு என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். விமான போக்குவரத்து நிறுவனங்கள் மூடப்பட்டால், கணிசமான பேர் வேலை இழப்பார்கள். நாங்கள் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க விரும்பவில்லை என்று அழுத்தம் திருத்தமாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசும், மாநில அரசும் இதே அளவுகோலை வைத்து, மற்ற தொழில் துறைக்கும், அதில் வேலை பார்க்கும் வறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும், குறிப்பாக பின்னலாடை, ஆயத்த ஆடை, சிறு, குறுந்தொழில்களுக்கும் காண்பிக்க வேண்டும். இதன் மூலம் லட்சக்கணக்கானவர்களின் வேலை இழப்பை தடுக்க வேண்டும்.