விவசாய கொள்கையில் மாற்றம் தேவை-ஐ.நா.

புதன், 23 ஜூலை 2008 (13:08 IST)
உணவுப் பொருட்களின் விலை உயர்வு, கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் எழுந்துள்ள சவால்களை முறியடிக்க விவசாய கொள்கைகளில் உடனடியாக மாற்றங்களை செய்ய வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் இதன் தலைவர் சிர்ஜான் கிரிம் பேசும் போது, விவசாயத் துறை மானியங்களை குறைத்தல், இறக்குமதி-ஏற்றுமதி வரியை நீக்குல் உட்பட வர்த்தக தடைகளை நீக்குவதால் உணவு உற்பத்தி அதிகரிக்க செய்யலாம். இதனால் ஆப்பிரிக்காவில் உள்ள 180 மில்லியன் சிறு விவசாயிகள் முன்னேற்றம் அடைய முடியும்.

உணவு பொருட்கள் நெருக்கடி, சர்வதேச சமுதாயம் வர்த்தகம் அதிகரிப்பதற்கான கொள்கைகளை மாற்ற ஒன்றிணைந்து சம்மதிப்பதன் மூலம் எல்லா தரப்புக்கும் பலன் கிடைப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகரிப்பதுடன், உலகம் முழுவதும் உள்ள ஏழைகளின் துயரையும் துடைக்க முடியும் என்று சிர்ஜான் கிரிம் கூறினார்.

உணவு நெருக்கடியை தீர்ப்பதற்கு 1.5 பில்லியன் (ஒரு பில்லியன் = 100 கோடி) டாலருக்கும் அதிகமாக சிறப்பு நிதி ஒதுக்கலாம் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரையை வரவேற்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் பேசுகையில், புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கை (Millennium Development Goals) எட்ட அரசுகள், நன்கொடையாளர்கள், ஐ.நா அமைப்புகள், சர்வதேச நிதி நிறுவனங்கள், வர்த்தக, அறிவுசார் துறையினர், மற்றும் எல்லா தரப்பினரும் இணைந்து உணவு நெருக்கடியை தீர்க்க கூட்டு சேர்ந்து செயல்பட அழைப்பு விடுத்தார்.

அவர் மேலும் பேசுகையில், உணவு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், பல நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு உதவி செய்யவும் வருடத்திற்கு 25 பில்லியன் டாலர் முதல் 40 பில்லியன் டாலர் வரை தேவைப்படுகிறது. உணவு பொருட்களின் விலை உயர்வும், கச்சா எண்ணெய் விலை உயர்வும், இதுவரை புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கில் எட்டியுள்ள முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டு விடும் என்று பான் கி மூன் எச்சரித்தார்.

அவர் மேலும் பேசுகையில், இந்த பிரச்சனைகளுக்கு நாம் தீர்வு காண தவறிவிட்டால், தினசரி அதிக குழந்தைகள் மரணத்தை சந்திக்க வேண்டியதிருக்கும், அதிகளவு குடும்பங்கள் உணவு இன்றி பட்டினி கிடக்க நேரிடும், இந்த துயரம் அடுத்த தலைமுறையினரை அதிக அளவு பாதிக்கும் என்று கூறினார்.

புத்தாயிரம் ஆண்டு வளர்ச்சி இலக்கு என்பது 2015 ஆம் ஆண்டுக்குள் எட்டு விதமான வறுமை ஒழிப்பு இலக்கை அடைவதற்காக ஐ.நா சபையால் அறிவிக்கப்பட்ட திட்டமாகும்.

உணவு பொருட்கள், கச்சா எண்ணெய் விலை ஏற்றத்தால் 75 வளரும் நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று சர்வதேச நிதியத்தின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விலை ஏற்றத்தினால் 50 நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3 முதல் 10 விழுக்காடு வரை குறையும். அத்துடன் 100 மில்லியன் மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கியும் எச்சரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்