வேளாண் மேம்பாட்டிற்காக கடந்த சில ஆண்டுகளாக செய்யப்பட்ட திட்ட முதலீடுகள் உரிய பயனைத் தரத் துவங்கியுள்ளதாகவும், நமது நாட்டின் வேளாண் உற்பத்தி மேலும் பெருகும் என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் இன்று நடந்த இந்திய வேளாண் ஆராய்ச்சிப் பேரவையின் 79வது துவக்க தின விழாவில் கலந்துகொண்டு பேசிய சரத் பவார், நெல்லிற்கு அளிக்கப்பட்டுவந்த ஆதரவு விலையை உயர்த்தியது, ஊட்டமளிக்கக்கூடிய உரங்களைப் பயன்படுத்துவதற்கு அறிவிக்கப்பட்டுள்ள ஊக்கத் தொகை ஆகியவற்றின் காரணமாக நமது நாட்டின் வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என்று கூறினார்.
இந்த ஆண்டு தென்மேற்குப் (கரீப்) பருவக் காலத்தில் நெல், சோளம், சோயா ஆகியவற்றின் உற்பத்தி அமோகமாக இருக்கும் என்று பவார் கூறினார்.
1950-51ஆம் ஆண்டுகளில் 5.1 கோடி டன்னாக இருந்த நமது நாட்டின் உணவு உற்பத்தி இன்று 23.1 கோடி டன்னாக உயர்ந்துள்ளது என்று கூறிய சரத் பவார், 1970ஆம் ஆண்டிற்குப் பிறகு நமது நாட்டின் வேளாண் நிலங்களின் பரப்பு ஏற்றமின்றி 14 கோடி ஹெக்டேர் என்ற அளவிலயே (இதில் மூன்றில் இரண்டு பங்கு மட்டுமே மழை பெறும் நிலங்கள், மற்றவை வறண்ட நிலங்கள்) இருந்தாலும், நமது உற்பத்தி இந்த அளவிற்கு அதிகரித்திருப்பதற்கு நமது நாட்டின் வேளாண் விஞ்ஞானிகளின் பங்களிப்பே முக்கியக் காரணம் என்று கூறினார்.