தமிழகத்தில் உரத் தடுப்பாடு இல்லை : தமிழக அரசு விளக்கம்!
செவ்வாய், 24 ஜூன் 2008 (15:19 IST)
தமிழகத்தில் உரத் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக வேளாண்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த மாதத்திற்கு தமிழ்நாட்டில் 80,000 மெட்ரிக் டன் யூரியா, 31,000 மெட்ரிக் டன் எம்.ஓ.பி., 30,000 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் தேவைப்படுகிறது. ஆனால் 80,500 மெட்ரிக் டன் யூரியா, 64,000 மெட்ரிக் டன் எம்.ஓ.பி., 50,486 மெட்ரிக் டன் டி.ஏ.பி. உரம் கிடைக்க செய்யப்பட்டுள்ளது.
இந்த உரம் தனியார் சப்ளையர் மற்றும் டான்பெட் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்தி சில்லறை விற்பனை மற்றும் ஆரம்ப வேளாண் கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தாராளமாக கிடைக்க செய்ய வேளாண்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும், உர விநியோகம் சரியாக உள்ளதா என்பது குறித்து கடந்த 14ஆம் தேதி வேளாண்துறை செயலாளர் ஆய்வுக் கூட்டம் ஒன்றை நடத்தினார். ஒவ்வொரு மாதமும் தேவைப்படும் உரம் சீராக விநியோகம் செய்யப்படவும், இதற்கு தேவையான கையிருப்பை உறுதி செய்து கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இன்று டெல்டா பகுதி மாவட்ட ஆட்சியர்கள் உர விநியோகத்தை கண்காணித்து வருவதாகவும், புகார் எதுவும் விவசாயிகளிடம் இருந்து வரவில்லை என்றும் தெரிவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.