மகாராஷ்டிர மாநிலம் பூனாவில் மெகா ஆரஞ்சு பழ திருவிழா தொடங்கியது.
இந்தியாவில் அதிக அளவு ஆரஞ்சு பழம் உற்பத்தி செய்யப்படும் மாநிலம் மகாராஷ்டிரம். இவை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுவதுடன், ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் மாம்பழ பருவ காலத்தில் மாம்பழ திருவிழா நடத்துவதுபோல், மகாராஷ்டிராவில் ஒவ்வொரு வருடமும் ஆரஞ்சு பழ திருவிழாவை நடத்துகின்றனர்.
இதை மகாராஷ்டிர மாநில விவசாய விளைபொருட்கள் விற்பனை வாரியம் நடத்துகின்றது.
இப்போது நடைபெற்று வரும் ஆரஞ்சு திருவிழாவில் 40 ஆரஞ்சு விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் பங்கேற்றுள்ளன. இவை திருவிழாவில் கடைகளை அமைத்து பல்வேறு வகையான ஆரஞ்சு பழத்தை கண்காட்சிக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளன.
இந்த மெகா ஆரஞ்சி திருவிழாவை,சென்ற ஞாயிற்றுக் கிழமை மாநில விவசாய விளை பொருட்கள் விற்பனை துறை அமைச்சர் ஹார்ஸ் வர்தன் பட்டேல் துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது, நாங்கள் ஆரஞ்சு பழத்தை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்கின்றோம். இந்த திருவிழா மூலமாக பொது மக்கள் ஆரஞ்சு பழத்தை பற்றி அதிக அளவு தெரிந்து கொள்ளலாம் என்று கூறினார்.
இந்த ஆரஞ்சு திருவிழா, இப்போதுதான் முதன் முறையாக பூனாவில் நடத்தப்படுகிறது. இதனால் ஆரஞ்சு விவசாயிகள், அவர்கள் உற்பத்தி செய்த பழத்தை நேரடியாக மக்களிடம் விற்பனை செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது வரை விவசாயிகள் இடைத்தரகர்கள் மூலம் விற்பனை செய்து வந்தனர். இதனால் விவசாயிகளுக்கு குறைந்த விலை கிடைத்ததுடன், மக்களும் அதிக விலை கொடுத்து வாங்கினார்கள். இடைத்தரகர்கள் இலாபம் சம்பாதித்தனர்.
இதில் கடை வைத்திருந்த ஆரஞ்சு விவசாயி ஸ்ரீதர் தாக்ரே கூறுகையில், விவசாய விளை பொருட்கள் விற்பன வாரியம் எடுத்த முயற்சியால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர் என்று கூறினார்.
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் தான் ஆரஞ்சு பழ உற்பத்தியிலும், ஏற்றுமதி செய்வதிலும் முன்னணியில் உள்ளது. இந்த மாநிலத்தில் 1 லட்சத்து 21 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் ஆரஞ்சு பழத் தோட்டங்கள் உள்ளன. வருடத்திற்கு 7 லட்சம் டன்னிற்கும் அதிகமாக ஆரஞ்சு பழம் உற்பத்தியாகிறது. இதில் விதர்பா பிராந்தியத்தில் மட்டும் 65 விழுக்காடு உற்பத்தியாகின்றன.