மழை காலத்தில் ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ள நீரைத் தடுப்பணைகள், ஊருணிகள் மூலமாகச் சேமிக்கும் திட்டத்திற்குத் தமிழக அரசு ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளது.
இத்திட்டம் குறித்துத் தமிழக பட்ஜெட்டில், "தமிழகத்தில் உள்ள ஆறுகள், சிற்றாறுகள் மற்றும் ஓடைகளின் குறுக்கே, 48,500 தடுப்பணைகள், ஊருணிகள் ஆகியவற்றை அமைத்து நீரைச் சேமிப்பதற்கான பெரும் திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
சுமார் ரூ.550 கோடி மதிப்பீட்டிலான இத்திட்டம், நீர்வள ஆதாரத்துறை, வேளாண் பொறியியல் துறை, வனத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக, பொதுநல அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பங்கேற்புடன் வரும் நிதியாண்டிலிருந்து செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்திற்கு முதல்கட்டமாக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "கடந்த 2006-2007 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டவாறு, மதுரை மாநகரப் பகுதிகளில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை தடுப்பதற்கான திட்டத்திற்கு நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வரும் நிதியாண்டில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் இத்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படும்
மேலும், கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகள் ரூ. 211 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்" என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.