நமது மாநிலத்தில் கூட்டுறவுக் கடன்கள் ரத்து செய்யப்பட்டதற்காக கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.3,304 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், "நமது மாநிலத்தில் சுமார் ரூ. 7,000 கோடி கூட்டுறவுக் கடன்கள் இரத்து செய்யப்பட்டதற்காக, கூட்டுறவு நிறுவனங்களுக்கு கடந்த இரண்டாண்டுகளில் மாநில அரசால் இதுவரை ரூ.3,304 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வரும் 2008-2009 ஆம் நிதியாண்டிலும், கூட்டுறவு நிறுவனங்களுக்கு இந்த வகையில் மேலும் ரூ.1,150 கோடி ஒதுக்கீடு செள்யப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த நடவடிக்கைகளினால், 2006-2007 ஆம் ஆண்டில் ரூ.1,250 கோடியும், 2007-2008 ஆம் ஆண்டில் இதுவரை மேலும் ரூ. 1,177 கோடியும் புதிய பயிர்க் கடன்களாக வழங்கப்பட்டுள்ளதாகவும், 2008-2009 ஆம் ஆண்டில் ரூ.1,500 கோடி புதிய பயிர்க் கடன் வழங்கப்படும் என்று அரசு கூறியுள்ளது.
வேளாண் கடன்களுக்கான வட்டி வீதத்தை 2006-2007 ஆம் ஆண்டில் 9 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாகக் குறைத்து, அதனைக் கடந்த நிதிநிலை அறிக்கையில் 5 சதவீதமாக மேலும் குறைத்து வழங்கி வருவதாகவும் இது வரும் நிதியாண்டிலிருந்து 4 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.