மேட்டூர் அணை‌க்கு 48,000 கனஅடி ‌நீ‌ர்வரத்து

Webdunia

வியாழன், 25 அக்டோபர் 2007 (09:36 IST)
கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிக‌ளி‌ல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணை மீண்டும் நிரம்ப வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழையால், அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறந்துவிடப்படுகிறது. இதனா‌ல் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று பிற்பகலில் 45 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் 110 அடியாக இருந்தது. இன்று விழாக்கிழமை காலை எட்டு மணிக்கு அணையின் நீர்மட்டம் 112.00 அடியாக உயர்ந்தது.

அணைக்கு வினாடிக்கு 48 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களில் அணையின் நீர் மட்டம் ஏழு அடி உயர்ந்துள்ளது.
நீர்வரத்து இதே அளவு நீடித்தால் ஐந்து நாளில் அணை நிரம்ப வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளதால், டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து வெளியேற்றும் தண்ணீர் அளவு குறைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 1900 கனஅடி தண்ணீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது. இதில் டெல்டா பகுதி பாசனத்திற்காக ஆயிரம் கனஅடி செல்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்