வெங்காயம் பயிரிடப்படும் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வெங்காயம் விலை விண்ணைத் தொட்டுள்ளது.
வெங்காயம் மகாராஷ்டிரா மாநிலத்தில் லசால்கான், ஆந்திராவில் கர்னூல், கடப்பா, கர்நாடகாவில் பெல்லாரி ஆகிய பகுதிகளில் அதிகளவு பயிரிடப்படுகிறது. இந்த பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் வெங்காயம் தான் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பபடுகிறது. இத்துடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் விற்பனை மண்டிகளுக்கு கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இத்துடன் வயலில் விளைச்சல் ஆகியுள்ள வெங்காயமும், வயலில் தண்ணீர் தேங்கியுள்ளதால், அறுவடை செய்ய முடியவில்லை. இவை அழுகிப் போகும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.
புதிதாக வெங்காயம் விற்பனைக்கு வருதில் ஏற்பட்டுள்ள தடையால், இதன் விலைகள் அதிகரித்து வருகிறது.
சென்னையில் கிலோ ரூ.18 முதல் ரூ. 20 வரை விற்பனையாகிறது. இதன் விலை மேலும் அதிகரிக்கலாம் என்று மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.
வெங்காயத்தை அதிக நாட்கள் இருப்பிலும் வைக்க முடியாது. இது குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அழுக தொடங்கிவிடும் அபாயம் இருப்பதால், வியாபாரிகள் வாங்கி இருப்பு வைக்க தயங்குகின்றனர்.
ஆந்திர மாநில அரசின் பொது விநியோகத் துறை, வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து, சில்லறை விலையில் விற்பனை செய்து வருகின்றது. ஆந்திர மாநில அரசு வெங்காயத்திற்கு மானியம் வழங்கி, பொது விநியோக கடைகளின் மூலம் சலுகை விலையில் கிலோ ரூ.7 க்கு விற்பனை செய்கி்ன்றது. வெங்காயம் விளையும் ஆந்திராவில் ஹைதரபாத் நகரிலேயே காய்கறி கடைகளில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.14 வரை உயர்ந்து விட்டது. இதே போல் மும்பை, டெல்லி ஆகிய நகரங்களிலும் விலை உயர்ந்துள்ளன.
இதே போல் வடகிழக்கு மாநிலங்களிலும் வெங்காயம் விலை உயர்ந்துள்ளது. இந்த மாநிலங்களுக்கு ரயில் மூலமே காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ரயில்கள் குறித்த நேரத்தில் சென்றடைவதில்லை. இதனால் இவை ரயில்களிலேயே அழுகிப் போய் விடுகின்றன. அஸ்ஸாம் தலைநகர் கெளகாத்தியில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.28 க்கு உயர்ந்துவிட்டது.௦ இதே நிலை நீடித்தால் கிலோ ரூ.40 வரை உயரும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.