டெல்டா மாவட்டத்திற்கு கோபியில் இருந்து விதை நெல்

Webdunia

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2007 (10:37 IST)
காவிரி தண்ணீர் பாயும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக, கோபியில் இருந்து முதல் கட்டமாக 200 டன் வீரியமிக்க விதை நெல் கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு துறை மூலம் விதை நெல் உற்பத்தி செய்யப்படும் மையம், கோவைக்கு அடுத்தபடியாக ஈரோடு மாவட்டம் கோபியில் செயல்பட்டு வருகிறது.

இங்கு உற்பத்தியாகும் விதை நெல் அரக்கன்கோட்டை, தடப்பள்ளி, கீழ்பவானி பாசன விவசாயிகள் மற்றும் காவிரி டெல்டா பகுதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இங்கு ஏ.டி.டி. 36, 39, 43, ஐ.ஆர். 20, வீரிய பொன்னி, பவானி, ஏ.டி.ஆர். 45, பி.பி.டி. 5204 ஆகிய நெல் ரகங்கள் ஆண்டுதோறும் 500 முதல் 700 டன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

நல்ல முளைப்பு திறன் கொண்டதாகவும், கூடுதல் மகசூல் மற்றும் நோய் தாக்காத வகையில் இருப்பதாலும், தமிழக அளவில் கோபி வேளாண் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் விதை நெல்லுக்கு விவசாயிகள் மத்தியில் தனி மதிப்பு உள்ளது.

உற்பத்தி செய்யும் விதை நெல், தஞ்சை, திருச்சி, நாகை, மதுரை, திருவாரூர், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி பகுதிகளுக்கு தமிழக கூட்டுறவு விற்பனை சங்கம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது கோபி வேளாண் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்து 200 டன் விதை நெல், முதல் கட்டமாக அனுப்பப்பட்டு உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்