அடுத்த ஓராண்டில் 2.25 இலட்சம் த.தொ. வேலை வாய்ப்புகள்
திங்கள், 19 டிசம்பர் 2011 (16:38 IST)
உலக அளவில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்தாலும், தகவல் தொழில்நுட்பத் துறையை பொருத்தவரை இந்தியாவில் அடுத்த ஓராண்டுக் காலத்தில் 2 முதல் 2.25 பேர் வரை வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று இன்போசிஸ் நிறுவனத்தின் இணைத் தலைவர் கிரிஸ் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி இந்தியாவில் பொருளாதார சுணக்கத்தை ஏற்படுத்தினாலும், அது குறுகிய காலம்தான் இருக்கும் என்றும், நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்க்கும்போது தொழில்நுட்ப ரீதியிலான முதலீடு அதிகரிக்கும் என்றும் கோபால கிருஷ்ணன் கூறியுள்ளார்.
2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவின் போது ஏற்பட்ட வளர்ச்சியை விட வரும் ஆண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி இரண்டு மடங்காக இருக்கும் என்று நாஸ்காம் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள கோபால கிருஷ்ணன், இந்த ஆண்டை இட அடுத்த ஆண்டில் 2 முதல் 2.25 இலட்சம் வேலை வாய்ப்புகள் த.தொ. துறையில் கூடுதலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.