முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஏணியாக பல்வேறு துறைகளில் ஏராளாமான வேலைவாய்ப்புகள் காத்துக் கிடக்கின்றன. அவற்றுள் முக்கியமானது இதழியல் துறையும் ஒன்று.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக வர்ணிக்கப்படும் பத்திரிக்கை, தொலைக்காட்சி போன்ற ஊடகத்துறைகள் இன்றைய இளைஞர்களுக்கு பணத்தை மட்டும் தருவதுடன் பெயரையும் புகழையும் சம்பாதித்துத் தருகின்றன. இத்துறையில் சாதிக்க என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? இதோ உங்களுக்காக...
தற்போதுள்ள காலகட்டத்தில் இதழியல் துறையை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒன்று அச்சு ஊடகத்துறை, மற்றொன்று மின்னணு ஊடகத்துறை.
இதில் அச்சு ஊடகத்துறை என்பது அச்சில் வெளிவரக்கூடிய தினசரி, வார, மாத இதழ்களைக் குறிக்கிறது. இவற்றில் பத்திரிக்கையின் முதன்மை ஆசிரியருக்குக் கீழ் உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், சிறப்பு செய்தியாளர்கள், பத்தி எழுத்தாளர்கள் என்ற இனங்களில் பணி புரிய வாய்ப்புகள் உண்டு.
இதுதவிர கார்ட்டூனிஸ்ட், புகைப்படக் கலைஞர், பிழை திருத்துனர், வரைகலை வடிவமைப்பாளர், பக்க வடிவமைப்பாளர் என பல வேலைகளும் இதில் உள்ளன.
மின்னணு ஊடகத்துறை என்பது தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் போன்ற ஊடகங்களை உள்ளடக்கியது. அச்சு ஊடகத்துறையில் இருந்து இது வேறுபட்டது; நவீனமயமானதும் கூட.
மின்னணு ஊடகங்களில் ஆசிரியர், உதவி ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக் கலைஞர்கள், ஒளி- ஒலிப்பதிவாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், செய்தி வாசிப்பாளர், இணையத்தில் பக்க வடிவமைப்பாளர், அரங்கு அமைப்பாளர் என பல்வேறு வகைகளில் வேலைவாய்ப்பு உள்ளன.
இன்றை கால கட்டத்தில் பத்திரிக்கையாளர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளன. அதற்கேற்ப எளிதான, பரந்த வாய்ப்புகளும் உருவாகி வருகின்றன. ஒரு காலத்தில் அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் வானொலி, தொலைக்காட்சிகள் மட்டுமே தகவல் அறிய உதவும் சாதனங்களாக இருந்தநிலை, இன்று தலைகீழாக மாறியிருப்பது ஒன்றே, இத்துறையில் வளர்ச்சியை காட்டுகிறது.
இதழியல் துறையில் அவரவர் பதவி மற்றும் திறமைக்கேற்ப ஊதியம் கிடைக்கிறது. பேனாவும், புகைப்படக் கேமராவும் மட்டும் இருந்தால் போதும் என்று எண்ணக்க்கூடாது. நடப்பு விவகாரங்கள் உட்பட அனைத்து துறைகள் சார்ந்த அறிவும், தெளிவான கண்ணோட்டமும், எளிய மொழி நடையும், கருத்துக்களை துணிவுடன் வெளியிடக்கூடிய மனப்பாங்கும், எதையும் எதிர்கொள்ளக்கூடிய தைரியமும் இத்துறைக்கு இன்றியமையாதது. நேரம் காலம் கருதாமல் ஈடுபாட்டுடன் பணியாற்ற வேண்டியதும் பத்திரிக்கையாளர்களின் கடமை.
அரசு வகுத்துள்ள நெறிகளின்படி நிருபருக்கு குறைந்த பட்சம் ரூ. 5,500 ல் இருந்து 10,000 வரை ஊதியம் வழங்கப்படுகிறது. மூத்த நிருபருக்கு இந்த ஊதியம் மேலும் அதிகரிக்கிறது.
உதவி ஆசியர் பணிக்கு ரூ. 8,000 என்று தொடங்கி ரூ. 15,000 ஆயிரம் வரை கிடைக்கிறது. அனுபவம், தகுதி போன்றவற்றின் அடிப்படையில் இது மேலும் அதிகரிக்கும். பணி புரியும் நிறுவனங்களைப் பொறுத்து இந்த ஊதியம் வேறுபடுகிறது. தற்போது இத்துறையில் போட்டி அதிகரித்திருப்பதால், பத்திரிக்கையாளர்களின் ஊதியமும் அதற்கேற்ப அதிகரித்து வருகிறது.
மேலும் பயணப்படி, தொலைபேசிக் கட்டணம் உள்ளிட்ட பிற சலுகைகளும் பத்திரிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. பலதரப்பட்ட பிரமுகர்களோடு பழகும் வாய்ப்பு, இத்துறையில் பணி புரிபவர்களுக்கு கிடைக்கும் சாதகமான அம்சம் ஆகும்.
நாட்டில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் இதழியல் பாடங்கள் உள்ளன. தமிழகத்தில் சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பெரும்பாலான கல்வி நிறுவனங்களில் இதழியல் பட்டப் படிப்புகள், பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
என்ன,சவால் நிறைந்த இதழியல் துறையில் அடியெடுத்து வைத்து சாதிப்பதற்கு நீங்கள் தயாரா?