மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரிக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அனுமதிக் கடிதம் அளித்துவிட்டது.
இந்தக் கல்வி ஆண்டில் பங்காரு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரியில் 150 மருத்துவ இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கழகம் ஏற்கெனவே அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் அனுமதிக் கடிதம் அண்மையில் வந்துள்ளது. இந்தக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு (65 சதவீதம்) 97 மருத்துவ இடங்கள் கிடைக்கும்.
சுயநிதிக் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அமைக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்ரமணியன் குழு, மேல்மருவத்தூர் மருத்துவக் கல்லூரிக்கான கட்டணத்தை மட்டும் இதுவரை அறிவிக்கவில்லை.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட்டில் நடைபெறும் 2-வது கட்ட கவுன்சலிங்கில் இந்த 97 இடங்கள் நிரப்பப்படும்.
மீதமுள்ள 53 மருத்துவ இடங்களை ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி நிர்வாகமே நிரப்பிக் கொள்ளும்.
நிர்வாக மருத்துவ இடங்களை நிரப்புவதற்கான நடைமுறைகளை மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கல்லூரி நிர்வாகம் மிக விரைவில் தொடங்க உள்ளது.