தனியார் பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு படிப்பு முடிக்கும் மாணாக்கர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் அண்ணா பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ளது.
பல்கலைக்கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பொறியியல் படிப்பை முடிக்கும் மாணாக்கர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் அண்ணா பல்லைக்கழக வளாகத்தில் நேற்றுத் துவங்கியது.
இதனை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் டி. விஸ்வநாதன் துவக்கி வைத்தார்.
விழாவில் அவர் பேசுகையில், இந்த முகாம் 2 மாதங்கள் நடைபெறும். இதில் இன்போசிஸ், காக்னிசண்ட் உட்பட 45 முக்கிய நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதுபோல கோடை விடுமுறையிலும் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
நிறுவனங்களின் தேவைக்கேற்ப சேலம், கோவை, மதுரை, திருச்சி போன்ற இடங்களிலும் வேலை வாய்ப்பு முகாமை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும்.
மேலும், கல்லூரியில் படிக்கும்போதே ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டால் வேலை வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எனவே கல்லூரிகளில் உள்ள ஆங்கில பேச்சுத் திறன் மேம்பாட்டக்கான மையத்தை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.