பிப் 5-ல் சென்னை அறிவியல் விழா

வியாழன், 29 ஜனவரி 2009 (12:35 IST)
பிப்ரவரி 5-ம் தேதி முத‌ல் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்னை அறிவியல் விழா-2009 தொடங்குகிறது. இந்த விழாவை அறிவியல் நகரம் அமைப்பு நடத்துகிறது.

இதுகு‌றி‌த்து அறிவியல் நகரத்தின் தலைவர் ஆனந்தகிருஷ்ணன், துணைத் தலைவர் ஸ்ரீதர் ஆகியோர் கூறுகை‌யி‌ல், சென்னை அறிவியல் விழா, பிப்ரவரி 5-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அன்றாட வாழ்வில் அறிவியல் தொடர்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படு‌த்து‌ம் நோ‌க்‌கி‌ல் இவ்விழா நடத்தப்படுகிறது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், மத்திய மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தங்களது அறிவியல் மாதிரிகளை கண்காட்சியில் வைக்கவுள்ளனர். கண்காட்சியில் 110 அரங்குகள் இடம்பெறுகின்றன. கண்காட்சியை‌க் காண வரு‌ம் பொதும‌க்களு‌க்கு கட்டணம் எதுவும் வசூலிக்கப்படமாட்டாது.

நம்பிக்கை- மூட நம்பிக்கை, பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட 5 தலைப்புகளில் விஞ்ஞானிகள் உரையாற்றவுள்ளனர். பிப்ரவரி 6-ம் தேதி இந்திய மருத்துவ முறைகள்; பிப்ரவரி 7-ம் தேதி சந்திரயான்; பிப்ரவரி 9-ம் தேதி எதிர்காலத்தில் நேனோ தொழில்நுட்பத்தின் பயன் என்ற தலைப்புகளில் குழு விவாதம் நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகளும் நடைபெறுகின்றன என்று அவ‌ர்க‌ள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்