மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வு: உச்ச நீதிமன்றம்!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (12:13 IST)
புதுடெல்லி: தமிழகத்தில் மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி தேர்வை நடத்த வேண்டும் என்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழத்தில் மாவட்ட வாரியாக 7,286 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் ஆர்.வி.ரவிச்சந்திரன், பன்சால் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது.
இந்த வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தது அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அந்தி அர்ஜுனா, இடைநிலை ஆசிரியர் தேர்வு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.
இதேபோல், தேர்வால் பாதிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவபாலன், பொதுவான பதிவு மூப்பு பட்டியல் அடிப்படையில் மாநில அளவில் தேர்வு செய்வதை உறுதி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.
இதையடுத்து, மாநில பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்ய தமிழக அரசு ஒப்புக் கொண்டதால் இந்த பிரச்சனை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவை உச்ச நீதிமன்ற அமர்வு உறுதி செய்தது.
அத்துடன், இடைநிலை ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படும் ஆசிரியர்கள், தங்களுடைய பணி இடங்களை ஒரு மாவட்டத்தில் இருந்து வேறு மாவட்டத்துக்கு மாற்றக் கூடாது' என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.