'அமெரிக்க நிதி நெருக்கடியால் இந்தியாவில் வேலை பெருகும்'
திங்கள், 29 செப்டம்பர் 2008 (16:49 IST)
அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார, நிதி நெருக்கடிகளால் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அவுட்சோர்சிங் துறைகளில் வேலை வாய்ப்புகள் மேலும் பெருகும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இதுதொடர்பாக 'எவரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட்' வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், வளர்ந்த நாடுகளில் வேலைகளுக்கு செலவிடும் நிதியைக் குறைக்கும் வகையில், அப்பணிகளை செலவினம் குறைந்த வளரும் நாடுகளுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கிறது.
அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் தகவல் தொழில் நுட்ப அவுட்சோர்சிங் துறை 145 முதல் 165 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் காப்பீட்டுத் துறையின் வளர்ச்சி 12 முதல் 15 மடங்கு அதிகரிக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
தற்போது அமெரிக்கச் சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், செலவினக் குறைப்பு கருதி வெளிநாடுகளுக்கு அவுட்சோர்சிங் பணிகள் அளிக்கப்படுவதில் அங்குள்ள பங்குதாரர்களும் ஆர்வம் காட்டுவதாக, எவரெஸ்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் துணைத் தலைவர் நிகில் ராஜ்பால் தெரிவித்தார்.
மேலைநாட்டு வங்கி, நிதி நிறுவனஙகள் செலவினத்தை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, இதனால் மேற்கத்திய நாடுகள் அவுட்சோர்சிங் மூலம் பணிகளுக்கு வெளிநாடுகளை நாட வேடியிருப்பதாக அவர் மேலும் கூறினார்.
மேலை நாடுகளில் உள்ள வங்கி, காப்பீடுத் துறைகள் உள்ளிட்ட நிதித்துறை நிறுவனங்கள் சேவைகளில் 40 முதல் 45 விழுக்காடு வெளிநாடுகளில் நடக்கின்றன.