கூட்டு அணுகுமுறை: பாரதியாசன் பல்கலை. முடிவு!

திங்கள், 29 செப்டம்பர் 2008 (12:31 IST)
அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை தனக்கு கீழுள்ள கல்லூரிகளுடன் கூட்டாகப் பகிர்ந்து கொள்வது என்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தின் கல்வி விவகாரங்களுக்கான நிலைக்குழுக் கூட்டம் துணைவேந்தர் பொன்னவைக்கோ தலைமையில், திருச்சியில் சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அவர், பல்கலைக்கழகம் தனக்கு கிடைக்கும் ஆதார வளங்கள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை தனக்குக் கீழ் செயல்படும் கல்லூரிகள் இடையே பகிர்ந்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.

இதன்படி வருவாய் மாவட்ட அளவில் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு, அவற்றுடன் கூட்டு அணுகுமுறையில் இவை பகிர்ந்து கொள்ளப்படும் என்ற பொன்னவைக்கோ, இக்கருத்தை கல்லூரிகள் இடையே எடுத்துச் செல்லும் நோக்கில் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

பல்கலைக்கழக பாடத்திட்டம், கல்வியின் தரத்தை மேம்படுத்துவதில் மட்டுமே இக்குழு கவனம் செலுத்தாமல், மாணவர்கள் இடையே தன்னம்பிக்கை, எதிர்காலத் திட்டம், வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு ஆகியவற்றை உருவாக்குவதிலும் அது முனைப்பு காட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்