ஆசிரியர் தேர்வு: 22ல் சான்றிதழ் சரிபார்ப்பு!

புதன், 17 செப்டம்பர் 2008 (17:03 IST)
காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிப்பதற்காக, சான்றிதழ் சரிபார்க்கும் பணி வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது.

இதற்கான பணிகளை வேலைவாய்ப்பு துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் இணைந்து தற்போது மேற்கொண்டு வருகின்றன.

இதன்படி புதியதாக 7,500 பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையிடம் பதிவுமூப்பு பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் கேட்டிருந்தது.

தற்போது பட்டதாரி ஆசிரியர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி வரும் 22 ஆம் தேதி தொடங்குகிறது. சென்னை நகரிலும் மேலும் 10 இடங்களிலும் இப்பணி நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்