மெட்ரிக் தேர்வு: 16-ல் நுழைவுச்சீட்டு!

சனி, 13 செப்டம்பர் 2008 (11:40 IST)
வரும் 24 ஆம் தேதி தொடங்கவுள்ள மெட்ரிகுலேஷன் தேர்வுகளுக்கான அனுமதி நுழைவுச் சீட்டு வரும் 16 மற்றும் 17 ஆம் தேதிகளில் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அதன் சென்னை மண்டல இயக்குனர் சே. மாதாவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகில் உள்ள தேர்வு மையங்களை அணுகி நுழைவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

நுழைவுச்சீட்டை பெறும்போது மாணவர்கள் அதில் தங்கள் பெயர், பிறந்ததேதி, தேர்வு மையம், பதிவு எண், தேர்வு எழுதும் பாடங்கள் போன்றவை சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா? என்பதை சரிபார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

தேர்வு மையங்களில் நுழைவுச் சீட்டு கிடைக்கப்பெறாத மாணவர்கள், உரிய காலத்தில் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆவணங்களுடன் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் துறை இயக்குனரில் கூடுதல் செயலாளரை (மெட்ரிக்) நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேர்வு அனுமதி நுழைவுச் சீட்டு எக்காரணம் கொண்டும் தபாலில் அனுப்பி வைக்கப்படாது என்றும், தேர்வு தொடங்குவதற்கு முதல் நாளன்று ரூ. 30-க்கு அஞ்சல்தலை ஒட்டப்பட, சுய முகவரி எழுதப்பட்ட உறையை தேர்வு மையத்தில் ஒப்படைக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்